Showing posts with label Central Government. Show all posts
Showing posts with label Central Government. Show all posts

Friday, 5 August 2016

ஜிஎஸ்டி என்றால் என்ன?


நாடு சுதந்திரமடைந்தபிறகு வரி விதிப்பில் மேற்கொள்ளப்படும் மிகப் பெரிய மாற்றம் இதுவாகும். நாடு முழுவதும் ஒருமுனை வரி விதிப்பைக் கொண்டு வரும் வகையில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட உள்ளது. இதன் முக்கிய அம்சங்கள்:

* இது ஒரே சீரான சரக்கு மற்றும் சேவைகளுக்கு விதிக்கப் படும் மறைமுக வரி விதிப்பாகும். இது நாடு முழுவதற்கும் ஒரே அளவாக இருக்கும். பல முன்னேறிய நாடுகள் இத்தகைய வரி விதிப்பு முறையைத்தான் பின்பற்றுகின்றன. உற்பத்தி, விற்பனை, நுகர்வு ஆகிய அனைத்துக்கும் ஒரே முனை வரி விதிப்பைக் கொண்ட ஒருங்கிணைந்த வரி விதிப்பாகும்.

* மத்திய அரசு விதிக்கும் உற்பத்தி வரி, சேவை வரி, உற் பத்தி மற்றும் சுங்கத்துறையில் விதிக்கப்படும் கூடுதல் வரி, சிறப்பு கூடுதல் சுங்க வரி, செஸ், சர்சார்ஜ் உள்ளிட்ட அனைத்து வரி விதிப்புகளும் நீக்கப்பட்டு ஒரு முனை வரியாக விதிக்கப் படும்.

* மாநில அரசு விதிக்கும் மதிப்பு கூட்டு வரி (வாட்) மத்திய வரி, வாங்கும்போது வரி, நுழைவு வரி, பொழுதுபோக்கு வரி, விளம்பரங்கள் மீதான வரி, லாட்டரி, பந்தயம், சூதாட்டம், மாநில அரசு விதிக்கும் பிற வரி விதிப்புகளுக்கு மாற்றாக இது அமையும்.

* அதிக வரிச் சுமையைக் குறைப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். பொதுவாக மத்திய, மாநில அரசுகள் பொருள் உற்பத்தி மதிப்பை அடிப்படை யாகக் கொண்டு வரி விதிப்ப தில்லை. இருப்பினும் பல்வேறு நிலைகளில் வரி விதிப்புக்கு உள்ளாக்கப்படும். இது நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத் தியை (ஜிடிபி) மறைமுகமாக பாதிக்கிறது. வரி ஏய்ப்பு, குறைந்த வரி ஆகியவற்றை தவிர்ப்பதோடு தொழில் புரிவதை எளிதாக்கும்.

* 2011-ம் ஆண்டு வடிவமைக் கப்பட்ட ஜிஎஸ்டி மசோதா வரை வில் கச்சா எண்ணெய், பெட் ரோல், டீசல், எரிவாயு, விமான எரிபொருள் மற்றும் மதுபானங் கள் ஜிஎஸ்டி வரி விதிப்பு பட்டியலில் இடம்பெறவில்லை.

* ஜிஎஸ்டி தொடர்பாக மத்திய, மாநில அரசுகளிடையே ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்க்க ஜிஎஸ்டி சமரச தீர்வு ஆணையம் ஏற்படுத்தப்படும். மாநிலங்களுக்கு இப்புதிய வரி விதிப்பு முறையால் ஏற்படும் வரி வருவாய் இழப்பு குறித்து இது ஆராயும். ஆனால் 2014-ல் கொண்டு வரப்பட்ட திருத்தத்தில் ஆணையத்துக்கு இத்தகைய அதிகாரம் நீக்கப்பட்டுள்ளது.

* 2014-ல் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தில் மதுபான வகைகள் ஜிஎஸ்டி பட்டியலில் இடம்பெறவில்லை.

* மாநிலங்கள் சில முக்கிய பொருள்கள் மீது வரி விதிப்பைக் குறைக்கலாம் என 2011-ல் அளிக் கப்பட்ட விதி 2014-ல் மேற்கொள் ளப்பட்ட திருத்தத்தில் முற்றிலு மாக நீக்கப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து பிரிவில் எந்த உணவுப் பொருளும் இடம்பெற முடியாது.

* அதேபோல பஞ்சாயத்து மற்றும் முனிசிபாலிட்டிகளில் பொருள் நுழைவு வரி விதிக்கலாம் என்ற விதிமுறையும் 2014 ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தில் முற்றிலுமாக நீக்கப்பட்டுவிட்டது.

Friday, 27 May 2016

பொருளாதார உறுதித்தன்மைக்கு சிறந்த கொள்கைகள் அவசியம்: ரகுராம் ராஜன் வலியுறுத்தல்

ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் | கோப்புப் படம்: ஏ.பி.

மும்பையில் வியாழக்கிழமை(26.05.2016) தொடங்கிய சார்க் நாடுகளின் மத்திய வங்கியின் கவர்னர்கள் பங்கேற்ற கருத்தரங்கில் தொடக்க உரை நிகழ்த்திய ரகுராம் ராஜன், "சீனாவில் தற்போது பொருளாதார தேக்க நிலை நிலவுகிறது. சர்வதேச அளவில் காணப்படும் மந்த நிலை சார்க் நாடுகளில் நிலவும் பொருளாதார சூழல் ஆகிய காரணங்களால் இந்திய ரூபாயின் உறுதித்தன்மையை நிலைநாட்ட எத்தகைய உச்சபட்ச நடவடிக்கையையும் ஆர்பிஐ எடுக்க வேண்டியுள்ளது.
இந்தியா தற்போது நான்கு கட்ட அணுகுமுறையை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம்தான் வெளிப்புற சூழலால் ஏற்படும் பாதிப்புகளை, அதாவது சர்வதேச பொருளாதார தேக்க நிலை காரணமாக ஏற்படும் சரிவை ஈடுகட்ட இத்தகைய அணுகுமுறையை எடுத்துள்ளது. இதன்படி சிறப்பான கொள்கைகள், போதிய அளவு பணப் புழக்கம் நிலவ தேவையான நிதி நிர்வாகம், இந்திய கரன்சியின் மதிப்பில் நிலவும் ஏற்ற, இறக்க சூழலைத் தடுக்க போதிய அளவுக்கு அந்நியச் செலாவணியை கையிருப்பில் வைத்திருப்பது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
இந்தியாவில் பொருளாதார உறுதித்தன்மை ஏற்பட சிறப்பான கொள்கைகள் எடுக்கப்படுவது அவசியம். ரூபாயின் மதிப்பு சரியும் போதெல்லாம் அதைத் தடுக்க ரிசர்வ் வங்கி பல முறை குறுக்கிட்டு டாலரை விடுவித்துள்ளது. இதற்காகவே அந்நியச் செலாவணி கையிருப்பை அதிகமாக வைத்துள்ளதோடு தேவையான அளவு கையிருப்பில் எப்போதும் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுத்துள்ளது.
சீனாவில் ஏற்பட்டுள்ள தேக்க நிலை சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக சார்க் நாடுகளில் இதன் தாக்கம் இருக்கும்.
கடந்த காலங்களைப் போல் அல்லாமல் சீனாவின் இறக்குமதி குறைந்துள்ளது. வர்த்தகம் மற்றும் அங்கிருந்து சார்க் பிராந்திய நாடுகளில் மேற்கொள்ளப்படும் ரெமிட்டன்ஸ்கள் (பணம் அனுப்புவது) குறைந்துள்ளது. இத்தகைய பாதிப்பை சார்க் நாடுகள் தவிர்க்க முடியாது. இப்போது உள்ள தாக்கத்தை விட இன்னும் அதிகமான பாதிப்புகள் ஏற்படும். தனது பொருளாதாரத்தை மேம்படுத்த சீனா எடுக்கும் நடவடிக்கைகள் சார்க் நாடுகளில் கூடுதலான பாதிப்பை ஏற்படுத்தும்.
தற்போது சீனா இரண்டு வகையான பாதிப்பைகளை எதிர்கொண்டுள்ளது. சக்திக்கும் மீறிய வளர்ச்சிக்காக வழங்கப்பட்ட கடன்கள் திரும்பாததால் வங்கிகள் கடுமையான நிதி நெருக்கடியில் உள்ளன. மேலும் நிழல் வங்கி முறையால் இந்த பாதிப்பு மேலும் அதிகமாக உள்ளது.
இவை இரண்டுமே வளர்ச்சியைக் கீழிறக்கும் விஷயங்களாகும். இது சீனாவை மட்டுமல்ல சார்க் நாடுகளின் பொருளாதாரத்தையும் பாதிக்கும். சீனாவின் வளர்ச்சி அந்நாட்டு கொள்கைகளால் மட்டுமல்ல, அந்நாட்டின் வளர்ச்சி பிற நாடுகளின் வளர்ச்சியையும் சார்ந்துள்ளது.
உள்நாட்டில் நிதி மேலாண்மை குறித்து பேசிய ராஜன், சில கடுமையான நடவடிக்கைகள் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும். சிறப்பான நிர்வாகம் மூலம் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதோடு உணவுப் பொருள் விலை உயர்வையும் குறைக்கலாம். பணவீக்கம் சார்ந்த கொள்கைகள் மூலம்தான் இது சாத்தியமாகும்.
வங்கிகளின் வாராக் கடனுக்கு ஒதுக்கீடு செய்வதன் மூலம் அவற்றின் நிதி நிலை மேம்படும். சர்வதேச அளவில் நிலவும் நிச்சயமற்ற சூழலில் இதுபோன்ற நடவடிக்கைகள் மிகவும் அவசியமாகிறது" என்றார் ரகுராம் ராஜன்.
சார்க் பைனான்ஸ் எனப்படும் இப்பிராந்திய மத்திய வங்கிகளின் கவர்னர்கள் மற்றும் நிதிச் செயலர்கள் இக்கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ளனர்.

Thursday, 26 May 2016

பெண்கள் பாதுகாப்பு; பஸ்களில் சிசிடிவி கேமராக்கள், ஜிபிஎஸ்: மத்திய அரசு அறிவிப்பு

மத்திய நெடுஞ்சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பேருந்து ஒன்றில் பெண்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்கிறார். | படம்: பிடிஐ.
நாடு முழுவதும் பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பொது போக்குவரத்து பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்கள், ஆபத்து கால அழைப்பு பொத்தான்கள், ஜிபிஎஸ் நிறுவப்படுவது கட்டாயமாக்கப்படும் என மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதன் கட்கரி தெரிவித்துள்ளார். 

டெல்லியில் புதனன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நிதின் கட்கரி கூறியதாவது:

நிர்பயா சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவது மிகவும் அவசியமானது. எனவே அனைத்து பொது போக்குவரத்து பேருந்துகளிலும் கண்காணிப்பு கேமராக்கள், ஆபத்து கால அழைப்பு பொத்தான்கள் மற்றும் ஜிபிஎஸ் கருவிகள் நிறுவப்படுவது கட்டாயமாக்கப்படும். 

இதற்கான மத்திய அரசின் அறிவிக்கை வரும் ஜூன் 2-ம் தேதி வெளியிடப்படும். ராஜஸ்தான் மாநில போக்குவரத்து கழகத்தில் சோதனை ரீதியாக இந்த நடைமுறைகள் பின்பற்றப்பட்டது. அதில் வெற்றி கிடைத்திருப்பதை அடுத்து, நாடு முழுவதும் இந்த திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளோம். 

பேருந்தில் செல்லும் ஒரு பெண்ணிடம் யாரேனும் தகாத முறையில் நடக்க முயற்சித்தால், உடனடியாக அவர் அங்குள்ள ஆபத்து கால அழைப்பு பொத்தானை அழுத்திவிட்டால் போதும். அந்த அழைப்பு ஜிபிஎஸ் வழியாக அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு தானாகவே செல்லும். 

மேலும் பேருந்தில் உள்ள கண்காணிப்பு கேமராவும் அங்கு நடக்கும் காட்சிகளை பதிவு செய்து மத்திய கட்டுப்பாட்டு அறைக்கு நேரலையாக அனுப்பும். அதை வைத்து அந்த பேருந்தை உடனடியாக பின்தொடர்ந்து சென்று, பாதிக்கப்பட்ட பெண்ணை பத்திரமாக காப்பாற்ற முடியும்.

Wednesday, 18 May 2016

வருமான சுய அறிவிப்பு திட்டம் ஜூன் 1-ல் தொடக்கம்

முந்தைய ஆண்டுகளில் சரியான வருமானத்தை அறிவிக்காதவர்கள் அனைவரும் தாங்களாகவே முன்வந்து தங்கள் வருமானம் குறித்த தகவல்களை அறிவிக்க மத்திய அரசின் வருமான அறிவிப்பு திட்டம் வாய்ப்பினை வழங்குகிறது.

இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''வருமான அறிவிப்பு திட்டத்தின் கீழ் தகுதியுள்ள நபர்களால் அறிவிக்கப்பட்ட வருமானத்தின் மேல், 25% வரி, செலுத்தப்பட்ட வரியில் 25% கிருஷி கல்யாண் செஸ், மற்றும் செலுத்தப்பட்ட வரியில் 25% அபராத வரி என மொத்தம் 45% ஒட்டு மொத்த வரி வசூலிக்கப்படும்.
இத்திட்டம் 1 ஜுன், 2016 ல் இருந்து செப்படம்பர் 30, 2016 ஆம் தேதி மற்றும் அபராதம் செலுத்துதல் போன்ற நடவடிக்கைகள் நவம்பர் 30, 2016 அன்று அல்லது அதற்கு முன் மேற்கொள்ளப்பட வேண்டும். வருமான விவரங்களை உரிய படிவத்தில் குறிப்பிட்ட இணைய தளத்திலும் மற்றும் அவரவர்களின் வரம்பிற்குட்பட்ட முதன்மை வருமான வரி ஆணையரிடமும் தெரிவிக்கலாம்.
இத்திட்டம் நிதி ஆண்டு 2015-16 மற்றும் அதற்கு முந்தைய நிதி ஆண்டுகளுக்கான வெளியிடப்படாத வருமானம், சொத்துக்கள் மற்றும் முதலீடுகளுக்கு பொருந்தும். இவ்வாறு அறிவிக்கப்பட்ட வருமானத்தில் குறிப்பிடப்பட்ட சொத்துக்களுக்கு, செல்வ வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
இந்த திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட வருமான அறிவிப்பு விவரங்கள் குறித்து, வருமான வரி அல்லது சொத்து வரி சட்டத்தின் கீழ் எத்தகைய விசாரணையோ அல்லது மீளாய்வோ நடத்தப்படாது.
மொத்த வரிகள், கூடுதல் வரி மற்றும் அபராதம் ஆகியவற்றை குறித்த நேரத்தில் செலுத்த தவறியமை, தவறான தகவல்களை தெரிவித்தோ, உண்மைகளை மூடி மறைத்தோ வெளியிட்டால் இத்திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட வருமான விவரங்களை பலனில்லாததாக்கும்.
இத்திட்டத்தின் கீழ் கணக்கில் காட்டாத வருமான விவரங்களை தெரிவிக்காத பட்சத்தில், வருமான வரித்துறையினரால் கண்டுபிடிக்கப்படும் வருடத்தில் வரிவிதிப்பிற்குள்ளாக்கப்படும். அவர்கள் மீது இதர தண்டனைக்குரிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
இந்தத் திட்டம் குறித்த முழு விவரங்கள் வருமான வரித்துறையின் இணையதள முகவரிwww.incometaxindia.gov.in ல் கிடைக்கும். இது தொடர்பான உரிய விதிகள் மற்றும் படிவங்கள் விரைவில் அறிவிக்கப்படும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது