நகரங்கள் வேகவேகமாக வளர்ந்துவரும் சூழலில் நகரத்துக்குள் புதிய வீடோ அடுக்குமாடி வீடோ வாங்குவது பலருக்கும் பெருங்கனவுதான். நகரத்துக்குள் வீடும் வேண்டும்; விலையும் குறைவாக இருக்க வேண்டும் என்று எண்ணம் கொண்டவர்கள் கொஞ்சம் அதிகம். அப்படி நினைப்பவர்களுக்குக் கட்டப்பட்ட பழைய வீடுகளை வாங்குவதே ஒரே வழி.
பழைய அடுக்குமாடி வீடு
சென்னை போன்ற பெருநகரங்களில் பழைய வீடு வாங்கலாம் என்றால், முதலில் நினைவுக்கு வருவது உயர்ந்து நிற்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகள்தான். அடுக்குமாடிக் குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகம் என்பதோடு, தனி வீடு வாங்க நிறைய பணம் செலவாகக்கூடும். எனவே, சில பல லட்சங்களில் வீடு வாங்க வேண்டும் என்றால் அடுக்குமாடி வீடே நல்ல தேர்வு.
என்ன விலையில் கிடைக்கும்?
பழைய வீடுகள் அல்லது அடுக்குமாடி வீடுகளை வாங்கும்போது பல விஷயங்களையும் கவனிக்க வேண்டும். சென்னை பள்ளிக்கரணையில் பழைய வீடு ஒன்றை விலைக்கு வாங்கிய பாலமுருகனின். தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். “கொஞ்சம் விலை குறைவாக வாங்க வேண்டும் என்பதற்காகப் பழைய அடுக்குமாடி வீடு வாங்கினேன். பழைய வீடு என்றாலும் மிகவும் பழைய வீட்டை வாங்கினால், அது நிறைய செலவு வைக்கவும் செய்யும். வீட்டின் வயது 15 ஆண்டுகளுக்குள் உட்பட்டதாக இருப்பது நல்லது. வீடு அமைந்திருக்கும் இடம், கட்டிடத்தின் வயது, கட்டிடத்தின் பராமரிப்பு, கட்டிடத்தின் வலிமை போன்ற விஷயங்களை வைத்து வீட்டின் விலையை முடிவு செய்ய வேண்டும். இதைப் பொறுத்து அந்தப் பகுதியில் விற்பனை செய்யப்படும் புதிய வீட்டின் விலையைவிட 25 முதல் 40 சதவீதம் குறைவாகக் கிடைக்கலாம்” என்று அவர் கூறினார்.
கவனிக்க வேண்டிய அம்சங்கள்
ஒரு வேளை 5 ஆண்டுகள் வயதான வீடு என்றால் 15 முதல் 20 சதவீதம் வரை விலை குறைவாகக் கிடைக்கவும் வாய்ப்புகள் உண்டு. வீடு மறுவிற்பனை எனும்போது, வீட்டில் வில்லங்கம் எதுவும் இருக்கிறதா என்பதைக் கட்டாயம் பார்க்க வேண்டும். இப்போதெல்லாம் பலரும் வீட்டுக் கடன் எடுத்தே வீட்டை வாங்குகிறார்கள். பல ஆண்டுகள் தவணை செலுத்துகிறார்கள். எனவே அசல் பத்திரங்கள் வங்கியில் இருக்கும். எனவே அசல் பத்திரத்தை வாங்கிப் பார்க்க வேண்டும். அப்படியில்லையென்றால் அந்த வங்கியின் அனுமதி பெற்று, அவர்கள் சொல்லும் நிபந்தனையின்படி வீட்டை வாங்கலாம்.
மேலும் வீட்டின் தாய்ப் பத்திரம் உள்ளிட்ட பல ஆவணங்களையும் இந்தத் துறையில் நிபுணத்துவம் பெற்றவர் அல்லது வழக்கறிஞரிடம் காட்டி ஆராயவும். ஒரு வேளை வங்கிக் கடன் முழுமையாகச் செலுத்தப்பட்ட பிறகு ஆவணம் தொலைந்துவிட்டது, நகல் பத்திரம் இருக்கிறது என்று சொன்னால் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். விலை கொஞ்சம் குறைவாகக் கிடைத்தாலும், இதுபோன்ற வீட்டை வாங்காமல் இருப்பதே நல்லது. வீட்டை வாங்குவதற்கு முன்பு சொத்து வரி, தண்ணீர் வரி உள்ளிட்ட வரியினங்களுக்குப் பணத்தைச் செலுத்தியிருக்கிறார்களா என்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள்.
தனி வீடு
இதுவே தனி வீடு என்றால் மனையின் சந்தை விலையோடு, கட்டிடத்தின் வயதைப் பொறுத்து வீட்டின் மதிப்பு இருக்கும். பழைய தனி வீடு என்றால், உண்மையான மதிப்பை அறிய சிவில் பொறியாளரைக் கொண்டு ஆராய்வது நல்லது. இதிலும் வீட்டின் மதிப்பை உறுதிசெய்தால், மேற்கூறிய எல்லா விஷயங்களும் தனி வீட்டுக்கும் பொருந்தும்.
வங்கிக் கடன்
பழைய வீட்டுக்கு வீட்டுக் கடன் கிடைக்குமா என்ற சந்தேகம் இருக்கும். பழைய வீடு வாங்க வங்கிகளும் வீட்டு வசதி நிறுவனங்களும் தாராளமாகக் கடன் தருகின்றன. பொதுவாக அடுக்குமாடிக் குடியிருப்பின் ஆயுளைப் பொறுத்து வங்கிக் கடன் கிடைக்கும். 15 முதல் 20 ஆண்டுகள் வயதுள்ள வீடாக இருந்தாலும் கடன் கிடைக்கும். மற்றபடி புதிய வீடு வாங்க வழங்கப்படும் வீட்டுக் கடனுக்கு உள்ள நிபந்தனைகளே பழைய வீடு வாங்கவும் பொருந்தும்.
வங்கிகளின் புள்ளிவிவரங்களின்படி வீட்டுக் கடன் வாங்குபவர்களில் சுமார் 15 முதல் 20 சதவீதம் பேர் பழைய வீடுகளை வாங்குவதாகக் கூறப்படுகிறது.