புதுச்சேரியில் சமூக விரோத செயல்கள், ஊழல், முறைகேடுகள்குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்க ஏதுவாக 1031 என்ற இலவச தொலைபேசி எண் ஒருவாரத்தில் அறிமுகம் செய்யப்படும் என்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்ற கிரண்பேடி, மாநிலத்தில் குற்றங்கள் தடுப்பு, சாலை போக்குவரத்து பாதுகாப்பு தொடர்பான வரைவு திட்டங்களை தயாரிக்கும்படி ஐஜி பிரவீர் ரஞ்சனுக்கு உத்தரவிட்டார். இதன்படி காவல்துறை ஐஜி தலைமையிலான குழு வரைவு திட்டங்களை தயாரித்து வழங்கியுள்ளது. அதன் வெளியீட்டு விழா மற்றும் பொதுமக்கள் கருத்தறியும் கூட்டம் நேற்று இரவு கம்பன் கலையரங்கில் நடைபெற்றது.
தலைமைச் செயலாளர் மனோஜ் பரிதா வரவேற்றார். வரைவுத் திட்டங்கள் தொடர்பாக ஐஜி பிரவீர் ரஞ்சன் நோக்கவுரை ஆற்றினார். வரைவுத் திட்டங்களை வெளியிட்டு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பேசியதாவது:
‘‘புதுச்சேரி மிகவும் அழகான அமைதியான மாநிலமாகும். இச்சிறிய யூனியன் பிரதேசத்தில் குற்றங்கள் நடைபெறுவதை முன்கூட்டியே தடுக்கவில்லை என்றால் காவல்துறை தங்கள் பணிகளை செய்யவில்லை என்பது தான் பொருளாகும்.
குற்றங்களை தடுப்பதில் காவல்துறை மட்டும் தனித்து செயல்பட இயலாது. பொதுமக்கள் பங்களிப்பும் அவசியமாகும். இரு தரப்பினரும் இணைந்து செயல்பட்டால் குற்றமில்லா நகராக புதுவையை உருவாக்க முடியும்.
புதுச்சேரியில் நடைபெறும் சமூகவிரோத செயல்கள், ஊழல், முறைகேடு, ரௌடிகள் குறித்த விவரங்கள் தொடர்பான புகார்களை பொது மக்கள் தெரிவிக்க காவல்துறை சார்பில் 1031 என்ற இலவச தொலைபேசி எண் இன்னும் ஒரு வாரத்தில் அறிமுகம் செய்யப்படும். அதாவது வரும் புதன்கிழமை முதல் இந்த தொலைபேசி எண் செயல்படும். புதுச்சேரியில் குற்றங்களை ,ஊழல், குறித்த தகவல்களை 1031 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.
புகார்கள் தெரிவிப்போரின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். துணை நிலை ஆளுநர், தலைமை செயலர், காவல்துறை தலைவர் என மூவருக்கும் மட்டும் தெரியும். தகவல் தெரிவிப்போர் விரும்பினால் மட்டுமே அவர்களை பற்றிய விவரங்கள் வெளியிடப்படும். மேலும் தகவல் உண்மையாக இருந்தால் உரிய வெகுமதியும் தரப்படும்.