பழையன கழிதலும் புதியன புகுதலும் அறிவியலில் சகஜம். அந்த வகையில் ‘செயற்கைக்கோள்களுக்கு மாற்றாக அதன் வேலைகளைவிட அதிக வேலைகளைச் செய்யும் திறன்கொண்ட ட்ரோன்களைப் பயன்படுத்தலாம்’ என்பது ஏர்பஸ் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு. அப்படி என்னதான் புதியதில் உள்ளது? பார்ப்போமா...
ஐரோப்பிய விமான நிறுவனமான ஏர்பஸ் புதிய கண்டுபிடிப்புகளுக்கு சளைக்காத ஒன்று. அண்மையில் 3டி பிரின்டிங் முறையில் எலெக்ட்ரிக் பைக் ஒன்றையும், சிறிய வகை விமானம் ஒன்றையும் உருவாக்கி சாதனை செய்தது. தற்போது ‘ஸெஃபைர் டி’ (Zephyr T) எனும் சூரிய சக்தியில் இயங்கும் ட்ரோன் விமானம் ஒன்றை வெற்றிகரமாக இயக்கி அறிவியல் வரலாற்றில் தனது பெயரை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது.
ஏர்பஸ் நிறுவனத்தின் சோலார் ட்ரோன்கள் தற்போது விண்வெளியில் செயற்கைக்கோள்கள் செய்யும் அனைத்து பணிகளையும் செய்யும். குறிப்பிடத்தக்க விஷயம், ‘மிகக் குறைவான செலவில் செய்யும்’ என்பதுதான்.
இதனை இந்த நிறுவனத்தினர் ‘போலி செயற்கைக்கோள்கள்’ என்று அழைக்கின்றனர். இதனை செயற்கைக்கோள்களைக் காட்டிலும் அதிக காலம் செயல்பட வைக்க முடியும். தொழில்நுட்ப மேம்பாடு, பேட்டரி உள்பட சில சிக்கல்களுக்கு இதனைத் திரும்ப பூமிக்கு வரவழைத்து, பழுது பார்த்து, மீண்டும் அனுப்பவும் முடியும் என்பது கூடுதல் பிளஸ் பாயின்ட்டுகளாக உள்ளன.
2008ம் ஆண்டே ஏர்பஸ் நிறுவனம் இதற்கான ஆராய்ச்சிகளைத் தொடங்கி விட்டது. 2010ம் ஆண்டு ‘ஸெஃபைர் 7’ எனும் ட்ரோனை 14 நாட்கள் இடைநிறுத்தாமல் எரிபொருள் நிரப்பாமல் வானில் சுற்றிவரச் செய்தது உலக சாதனையாக பதிவாகியுள்ளது. இந்த ட்ரோன்களை ராணுவ கண்காணிப்பு, அவசரகால தொலைத்தொடர்பு, அதிவேக இணையம் உள்ளிட்ட பணிகளுக்கும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
விண்வெளியில் காலாவதியான செயற்கைக்கோள் கழிவுகள் தொடர்ந்து அதிகரித்து வட்டப்பாதையில் சுற்றி வரும் நிலையில் இதுபோன்ற புதிய முயற்சிகள் அந்த ஆபத்தை பெருமளவு குறைக்கும்.