தவறுகளை தட்டிக் கேட்கும் தைரியத்தை இளைய தலை முறைக்கு கற்றுத்தர வேண்டும் என்று சிபிஐ முன்னாள் இயக்குனர் ஆர்.கே.ராகவன் கூறியுள்ளார்.
சுவாதி படுகொலை சம்பவம் குறித்து ‘தி இந்து’விடம் ஆர்.கே.ராகவன் கூறியதாவது:
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சுவாதியின் மரணம், அனைவரின் மனதிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த ரயில் நிலையத்தில் இத்தகைய படுகொலை நிகழும் என்றால் மற்ற இடத்தையும் நேரத் தையும் என்னவென்று சொல்வது?
எந்த ஒரு அசம்பாவிதம் நடக்கும்போதும் நமக்கு உதவி செய்ய அருகில் இருக்கும் மூன்றாம் நபரின் உதவி தேவைப்படுகிறது. ரயில் நிலையத்தில் இருந்த ஒருவர்கூட இந்த கொடுஞ்செயலை கண்டு நடுங்கவோ, உதவி செய்யவோ முன்வராததற்கு காரணம் என்ன? நாம் சக மனிதனின் துன்பத்தை பார்த்து, உதவும் மனிதாபிமானத்தை இழந்து விட்டோமோ என்ற எண்ணம் தோன்றுகிறது.
ஆரோக்கியமான சமுதாயம் உருவாக்க வேண்டுமெனில் சுய நலம் சற்று தலைதூக்காமல் இருக்க நாம் அனைவரும் முயலவேண்டும். கண்ணெதிரில் நடக்கும் தவறை தட்டிக் கேட்கும் தைரியம் மிகமிக அவசியம். இதை இளைய தலைமுறையினருக்கு உடனே கற்பிக்க வேண்டும். பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் தற்காப்பு கலைகளை பயில்வதும், பாதுகாப்பு கருவிகளை (சிறிய கத்தி, பெப்பர் ஸ்பிரே) கையாள கற்றுக்கொள்வதும் மிக அவசியம்.
இதுபோன்ற நேரத்தில் உதவி செய்பவர்களை தேவை இல்லாமல் அலையவிடுவதை தடுக்க வேண்டும். அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு தர காவல்துறையும் சட்டமும் முன்வர வேண்டும். அப்போதுதான் பொதுமக்கள் தயக்கமின்றி உதவி செய்ய முன்வருவர்.
சமூகத்தில் நடமாடி வரும் தீய சக்திகளை கண்டறிந்து அவற்றை களையும் முக்கிய பொறுப்பு காவல் துறையிடம்தான் உள்ளது. உடனடி நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் மக்கள் மத்தியில் காவல் துறையின் மதிப்பு மேலும் குறைய வாய்ப்பு உள்ளது.
சுவாதியின் படுகொலைக்கு எனது கடும் கண்டனத்தையும், அவரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
குற்றம் செய்யத் தூண்டும் மனநிலையை மாற்றுவதும் குற்றம் புரிந்தால் தண்டனையை கடுமையாக மாற்றுவதும் மிகவும் இன்றியமையாதது. உதவி செய்யும் குணமும் கூட்டாற்றலின் பலத்தை உணர்த்துவதும் இதுபோன்ற கொடுமைகள் மீண்டும் நடக்காமல் தடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.