இந்திய விவசாயம் ஒரு வகையில், தன்னுடைய கடந்த கால வெற்றிக்குக் குறிப்பாய்ப் பசுமைப் புரட்சிக்குப் பலிகடா ஆகி இருக்கிறது..!' என்று நான் சொல்லவில்லை. இந்த ஆண்டு வெளியிடப்பட்ட பொருளாதார அறிக்கை (எகனாமிக் சர்வே) கூறுகிறது. இது ஒரு, அரசு ஆவணம் என்பதால், இதில் உள்ள விவரங்களின் அடிப்படையில்தான் விவசாயம் குறித்து விவாதிக்க இருக்கிறோம்.
1966-67-ல், பசுமைப் புரட்சிக்குச் சற்று முன்னர், இந்தியாவில் பால், கோதுமை உற்பத்தி, அமெரிக்க உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்குதான் இருந்தது. 2013-14-ல், அமெரிக்காவை விடவும், நாம் 60 சதவீதம் அதிகம் உற்பத்தி செய்திருக்கிறோம்.
ஆனாலும் ஒரு மிகப் பெரிய சிக்கலைச் சந்திக்க வேண்டி உள்ளது. இந்திய விளைநிலங்களின் பெரும் பகுதியை, நெல், கோதுமை, கரும்பு உற்பத்தியே ஆக்கிரமித்துள்ளது. இவை, அதிக நிலப்பரப்பு, தண்ணீர், உரம் தேவைப்படுகிற பயிர்கள்.
இம்மூன்றிலும் நம்முடைய உற்பத்தித் திறன் பிற நாடுகளைக் காட்டினும் மிகக் குறைவு. ஆனால் பயறு வகைகளில் நாம் நல்ல உற்பத்தித் திறன் கொண்டிருக்கிறோம். பொதுவாக நம் மக்களிடையே புரதச் சத்துக் குறைபாடு பரவலாகக் காணப்படுகிறது. இதற்கு, பருப்பு வகைகளின் நுகர்வு குறைவாக இருப்பதே காரணம்.
இப்போதைக்கு நெல், கோதுமை, கரும்பு ஆகியன தேவைக்கு அதிகமாகவே உற்பத்தி ஆகிறது. பயறு வகைகளில் அப்படி இல்லை. இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். நுகர்வு குறைவாக இருக்கும்போதே இந்த நிலை!
பாதகம் செய்யாத பருப்பு
பருப்பு வகைகளை விளைவிக்க, குறைந்த இடமும் குறைவான தண்ணீருமே தேவைப்படும். அதிக விலையில் நல்ல சந்தையும் இருக்கிறது. ஆனாலும் பாசன வசதிகள் மிகுந்த இடங்களில் எல்லாம், மூன்று முக்கியப் பயிர்களை மட்டுமே நமது விவசாயிகள் நாடுகிறார்கள்.
பயறு வகைகளைப் பயிர் செய்வதில் நமக்கிருக்கும் தயக்கம் நீங்க வேண்டும். நமது அணுகுமுறையில் மாற்றம் வேண்டும் என்று, குறையாக அல்லாமல், ஓர் ஆலோசனையாக முன் வைக்கிறது ஆய்வறிக்கை. எல்லா மாநிலங்களிலும் இதற்கான மண்வளம், பருவச் சூழல் உள்ளிட்டவை பொருந்திவருமா என்பது ஆய்வுக்குரியது.
பிற நாடுகள், நம்மை விடவும் குறைந்த நீரைப் பயன்படுத்தி, அதிக உற்பத்தித் திறன் கொண்டவையாக இருக்கின்றன. ஆகவே, ‘குறைந்த உள்ளீட்டில், நிறைந்த பயன்' (less input - maximum output) எனும் கோட்பாட்டை வலிமையாக வலியுறுத்துகிறது அறிக்கை.
நெல், கோதுமை, கரும்புப் பயிரீட்டில், சீனா, பிரேஸில் நாடுகளைக் காட்டிலும் 2 முதல் 4 மடங்கு அதிகத் தண்ணீரை நாம் பயன்படுத்துகிறோம்.
இங்குள்ள வெப்பம், அதன் காரணமாய் ஆவியாகும் தண்ணீரின் அளவு ஆகியன ஆய்வில் கொள்ளப்பட்டனவா என்பது தெரியவில்லை.
விவசாயத்துக்கென மானிய விலையில் மின்சாரம் வழங்கப்படுவதும், தண்ணீர் விரயத்துக்கு ஒரு காரணம் என்கிறது ஆய்வறிக்கை.
‘நாசா'வின் ஆய்வுப்படி, இந்தியாவின் ‘தண்ணீர் அட்டவணை' ஒவ்வோர் ஆண்டும் 0.3 மீட்டர் அளவுக்குக் குறைந்துகொண்டே வருகிறது. 2002 - 2008 காலத்தில், 109 கியூபிக் கி.மீ. மேலான நிலத்தடி நீர் பயன்படுத்தி இருக்கிறோம்.
தண்ணீர் விரயமாவது தடுக்கப்பட வேண்டும். அதற்கு, வாய்க்கால் வழி ஓடி நெல்லுக்கும் பாய்கிற, மரபு வழி நீர்ப் பாசனை முறை மாற வேண்டும்.
தெளிப்பான், சொட்டு நீர்ப் பாசனம் போன்ற பாசன முறைகள் பரவலாக்கப்பட வேண்டும்.
‘வானம் பார்த்த பூமி'தான் நம் விவசாயிகளின் மிகப் பெரும் சவால். இந்த ஆபத்தைச் சமாளிப்பதற்கு அரசின் ஆலோசனைகள் பெரிதும் உதவக்கூடும். ஆனாலும், அரசின் கடமை அத்துடன் முடிந்துவிடக் கூடாது.
நாடெங்கும் நீர்ப்பாசனக் கட்டமைப்பு வலுப்படுத்தப்பட வேண்டும். ஆறு, ஏரி, குளங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு முறையாகப் பராமரிக்கப்பட வேண்டும். நதி நீர்ப் பங்கீடு, நதி நீர் இணைப்புக்கு முன்னுரிமை தந்து விரைந்து செயல்படுத்தப்பட வேண்டும்.
வறட்சி, வெள்ளம் போன்ற இயற்கை இடர்பாடுகளை எதிர்கொள்வதில், தொழில்முறை அணுகுமுறை வேண்டும்.
குறைந்தபட்சம் குறைந்த விலை
நமது வேளாண்குடி மக்கள் சந்திக்கிற மிக முக்கிய பிரச்சினை குறைந்தபட்ச ஆதரவு விலை (Minimum Support Price). கரும்பு நீங்கலாக, 23 பயிர்கள் இதன் கீழ் வருகின்றன. கரும்புக்கான குறைந்தபட்ச விலையை, நேரடியாக அரசே நிர்ணயிக்கா விட்டாலும், கொள்முதல் செய்யும் சர்க்கரை ஆலைகள், அரசு சொல்லும் குறைந்தபட்ச விலையை, விவசாயிகளுக்குச் சட்டப்படி தந்தே ஆக வேண்டும்.
பல சமயங்களில், அரசு நிர்ணயிக்கிற குறைந்தபட்ச கொள்முதல் விலை, கட்டுப்படி ஆவதில்லை. அதனால் பெரும் இழப்பு ஏற்படுகிறது. அவ்வப்போது அதிகரித்து நிர்ணயித்தாலும், எப்போதுமே தாங்கள் எதிர்பார்க்கிற நியாயமான ஏற்றம் இருப்பதே இல்லை என்று விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
விவசாயிகளை மிரட்டிவரும் கடன் தொல்லைகளுக்கு, ஆதரவு விலை அவர்களுக்கு ஆதரவாக இல்லை என்பதும் ஒரு காரணம்.
விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்வதில் தொடர்ந்து நிலவிவரும் தற்போதைய குழப்பமான முறை மாற வேண்டும். விவசாயிகளை உள்ளடக்கிய அவர்களின் பிரச்சினைகளை நன்கு உணர்ந்த நிபுணர் குழுவிடம் ஒப்படைத்தால் இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும். துரதிர்ஷ்டவசமாக இது, அதிகாரிகள் குழுவாகவே நின்று போய் விடுகிறது.
எந்தப் பிரச்சினைக்கும் கள நிலவரம் அறியாத நிர்வாகிகள், நிரந்தரத் தீர்வு எதையும் அளிக்கவே முடியாது. சுதந்திர இந்தியா இதனை உணர்ந்து கொண்டதாகவே தெரியவில்லை.
ரணம் தராத நிவாரணம்
அவ்வப்போது கடன் தள்ளுபடி அறிவிப்பு வந்து சற்றே ஆறுதல் தந்தாலும், அனேகமாக ஒவ்வொரு முறையுமே அது, பல தற்கொலைகளுக்குப் பிறகு, காலம் தாழ்ந்த நடவடிக்கையாகவே அமைந்து விடுகிறது. இடர்ப்பாடுகள் மீது வழங்கப்படும் நிவாரணம், பருவம் முடிந்து விளைச்சல் பணம் எப்போது வருமோ, அப்போதே கிடைக்க வகை செய்தல் வேண்டும். ஆனால் பல மாதங்கள், ஆண்டுகள் கழித்து, துன்பத்தை அனுபவித்த பிறகே, நிவாரணம் வழங்கப்படும் என்பது என்ன நீதி?
அப்போதைக்கு அப்போதே உடனடி நிவாரணம் கிடைக்கிற வகையில், வேளாண் மேலாண்மை முறை கொண்டு வரப்பட வேண்டும்.
சிறு துண்டுகளாகப் பிளவு பட்டுக் கிடக்கும் நிலங்கள் (fragmented lands), மந்த கதியில் நடைபெறும் வேளாண் ஆராய்ச்சி, மின்சாரம் மற்றும் உரத் தட்டுப்பாடு, விவசாயத் தொழிலாளர் தட்டுப்பாடு, நிலம் கையகப்படுத்துதல் சட்டம் தொடங்கி, சமூகம் சார்ந்த உள்ளூர்ப் பிரச்சினைகள் வரை, அச்சமூட்டும் ஆபத்துகளின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.
பயிர்க் காப்பீட்டுத் திட்டம், வங்கிக் கடன்கள், தேசிய வேளாண் சந்தை என்று பல நல்ல முயற்சிகளும் நிகழத்தான் செய்கின்றன.
ஆரோக்கியமான குறைந்தபட்ச பொருளாதார ஆதரவு உறுதியாக்கப்பட்டால்,
நமது விவசாயிகள், நிச்சயமற்ற எதிர்காலம் என்கிற இருளில் இருந்து வெளியில் வந்து, நம்பிக்கையுடன் சேற்றில் கால் வைப்பார்கள். அப்போதுதான், அடுத்த தலைமுறையினரும் ஆனந்தமாய் விவசாயத்தைத் தொடர்வார்கள். இல்லையேல், மாற்று வேலை தேடி மாநகரங்களுக்கு இளைய தலைமுறை படையெடுப்பதைத் தடுக்க முடியாது.
விவசாயத் தொழிலை விட்டு, கூட்டம் கூட்டமாக நகரத் தொடங்கிவிட்டால், இந்தியப் பொருளாதாரம் என்னவாகும்? ஆயிரம்தான் இருந்தாலும், நமது வாழ்வு, தாழ்வைத் தீர்மானிப்பது விவசாயம்தான். இந்த அடிப்படை உண்மை, பலருக்கு உறைத்ததாகத் தெரியவில்லை.
எல்லாச் சூழ்நிலைகளையும் எதிர்கொள்கிற, அத்தனை விவசாயிகளையும் உள்ளடக்கிய, ஒட்டுமொத்த வேளாண் கொள்கை இன்னமும் பரிணமிக்கவில்லை. இப்படி ஒன்று வந்தால்தான், விவாதங்கள் மறைந்து, விடிவு பிறக்கும்.
எல்லாப் போட்டித் தேர்வுகளிலும், விவசாயம் தொடர்பான கேள்விகள், மிக முக்கிய இடம் வகிக்கின்றன. இந்தத் துறையில், கருத்துகள், எதிர்க் கருத்துகள், அர்த்தமுள்ள ஆலோசனைகள், ஆழமான விளக்கங்கள் எனப் பலவற்றை இன்றைய இளைஞர்கள் கொண்டிருக்க வேண்டும் என்கிற வகையில்தான் தேர்வுகள் அமைக்கப்படுகின்றன. இது ஒரு வரவேற்கத்தக்க நல்ல செய்தி.