Friday 27 May 2016

பொருளாதார உறுதித்தன்மைக்கு சிறந்த கொள்கைகள் அவசியம்: ரகுராம் ராஜன் வலியுறுத்தல்

ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் | கோப்புப் படம்: ஏ.பி.

மும்பையில் வியாழக்கிழமை(26.05.2016) தொடங்கிய சார்க் நாடுகளின் மத்திய வங்கியின் கவர்னர்கள் பங்கேற்ற கருத்தரங்கில் தொடக்க உரை நிகழ்த்திய ரகுராம் ராஜன், "சீனாவில் தற்போது பொருளாதார தேக்க நிலை நிலவுகிறது. சர்வதேச அளவில் காணப்படும் மந்த நிலை சார்க் நாடுகளில் நிலவும் பொருளாதார சூழல் ஆகிய காரணங்களால் இந்திய ரூபாயின் உறுதித்தன்மையை நிலைநாட்ட எத்தகைய உச்சபட்ச நடவடிக்கையையும் ஆர்பிஐ எடுக்க வேண்டியுள்ளது.
இந்தியா தற்போது நான்கு கட்ட அணுகுமுறையை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம்தான் வெளிப்புற சூழலால் ஏற்படும் பாதிப்புகளை, அதாவது சர்வதேச பொருளாதார தேக்க நிலை காரணமாக ஏற்படும் சரிவை ஈடுகட்ட இத்தகைய அணுகுமுறையை எடுத்துள்ளது. இதன்படி சிறப்பான கொள்கைகள், போதிய அளவு பணப் புழக்கம் நிலவ தேவையான நிதி நிர்வாகம், இந்திய கரன்சியின் மதிப்பில் நிலவும் ஏற்ற, இறக்க சூழலைத் தடுக்க போதிய அளவுக்கு அந்நியச் செலாவணியை கையிருப்பில் வைத்திருப்பது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
இந்தியாவில் பொருளாதார உறுதித்தன்மை ஏற்பட சிறப்பான கொள்கைகள் எடுக்கப்படுவது அவசியம். ரூபாயின் மதிப்பு சரியும் போதெல்லாம் அதைத் தடுக்க ரிசர்வ் வங்கி பல முறை குறுக்கிட்டு டாலரை விடுவித்துள்ளது. இதற்காகவே அந்நியச் செலாவணி கையிருப்பை அதிகமாக வைத்துள்ளதோடு தேவையான அளவு கையிருப்பில் எப்போதும் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுத்துள்ளது.
சீனாவில் ஏற்பட்டுள்ள தேக்க நிலை சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக சார்க் நாடுகளில் இதன் தாக்கம் இருக்கும்.
கடந்த காலங்களைப் போல் அல்லாமல் சீனாவின் இறக்குமதி குறைந்துள்ளது. வர்த்தகம் மற்றும் அங்கிருந்து சார்க் பிராந்திய நாடுகளில் மேற்கொள்ளப்படும் ரெமிட்டன்ஸ்கள் (பணம் அனுப்புவது) குறைந்துள்ளது. இத்தகைய பாதிப்பை சார்க் நாடுகள் தவிர்க்க முடியாது. இப்போது உள்ள தாக்கத்தை விட இன்னும் அதிகமான பாதிப்புகள் ஏற்படும். தனது பொருளாதாரத்தை மேம்படுத்த சீனா எடுக்கும் நடவடிக்கைகள் சார்க் நாடுகளில் கூடுதலான பாதிப்பை ஏற்படுத்தும்.
தற்போது சீனா இரண்டு வகையான பாதிப்பைகளை எதிர்கொண்டுள்ளது. சக்திக்கும் மீறிய வளர்ச்சிக்காக வழங்கப்பட்ட கடன்கள் திரும்பாததால் வங்கிகள் கடுமையான நிதி நெருக்கடியில் உள்ளன. மேலும் நிழல் வங்கி முறையால் இந்த பாதிப்பு மேலும் அதிகமாக உள்ளது.
இவை இரண்டுமே வளர்ச்சியைக் கீழிறக்கும் விஷயங்களாகும். இது சீனாவை மட்டுமல்ல சார்க் நாடுகளின் பொருளாதாரத்தையும் பாதிக்கும். சீனாவின் வளர்ச்சி அந்நாட்டு கொள்கைகளால் மட்டுமல்ல, அந்நாட்டின் வளர்ச்சி பிற நாடுகளின் வளர்ச்சியையும் சார்ந்துள்ளது.
உள்நாட்டில் நிதி மேலாண்மை குறித்து பேசிய ராஜன், சில கடுமையான நடவடிக்கைகள் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும். சிறப்பான நிர்வாகம் மூலம் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதோடு உணவுப் பொருள் விலை உயர்வையும் குறைக்கலாம். பணவீக்கம் சார்ந்த கொள்கைகள் மூலம்தான் இது சாத்தியமாகும்.
வங்கிகளின் வாராக் கடனுக்கு ஒதுக்கீடு செய்வதன் மூலம் அவற்றின் நிதி நிலை மேம்படும். சர்வதேச அளவில் நிலவும் நிச்சயமற்ற சூழலில் இதுபோன்ற நடவடிக்கைகள் மிகவும் அவசியமாகிறது" என்றார் ரகுராம் ராஜன்.
சார்க் பைனான்ஸ் எனப்படும் இப்பிராந்திய மத்திய வங்கிகளின் கவர்னர்கள் மற்றும் நிதிச் செயலர்கள் இக்கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ளனர்.