நாடு முழுவதும் பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பொது போக்குவரத்து பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்கள், ஆபத்து கால அழைப்பு பொத்தான்கள், ஜிபிஎஸ் நிறுவப்படுவது கட்டாயமாக்கப்படும் என மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதன் கட்கரி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் புதனன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நிதின் கட்கரி கூறியதாவது:
நிர்பயா சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவது மிகவும் அவசியமானது. எனவே அனைத்து பொது போக்குவரத்து பேருந்துகளிலும் கண்காணிப்பு கேமராக்கள், ஆபத்து கால அழைப்பு பொத்தான்கள் மற்றும் ஜிபிஎஸ் கருவிகள் நிறுவப்படுவது கட்டாயமாக்கப்படும்.
இதற்கான மத்திய அரசின் அறிவிக்கை வரும் ஜூன் 2-ம் தேதி வெளியிடப்படும். ராஜஸ்தான் மாநில போக்குவரத்து கழகத்தில் சோதனை ரீதியாக இந்த நடைமுறைகள் பின்பற்றப்பட்டது. அதில் வெற்றி கிடைத்திருப்பதை அடுத்து, நாடு முழுவதும் இந்த திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளோம்.
பேருந்தில் செல்லும் ஒரு பெண்ணிடம் யாரேனும் தகாத முறையில் நடக்க முயற்சித்தால், உடனடியாக அவர் அங்குள்ள ஆபத்து கால அழைப்பு பொத்தானை அழுத்திவிட்டால் போதும். அந்த அழைப்பு ஜிபிஎஸ் வழியாக அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு தானாகவே செல்லும்.
மேலும் பேருந்தில் உள்ள கண்காணிப்பு கேமராவும் அங்கு நடக்கும் காட்சிகளை பதிவு செய்து மத்திய கட்டுப்பாட்டு அறைக்கு நேரலையாக அனுப்பும். அதை வைத்து அந்த பேருந்தை உடனடியாக பின்தொடர்ந்து சென்று, பாதிக்கப்பட்ட பெண்ணை பத்திரமாக காப்பாற்ற முடியும்.
No comments:
Post a Comment