“தீவிரவாதிகளைத் தேடுவதாகச் சொல்லிக்கொண்டு எனது வீட்டுக்குள் ராணுவத்தினர் வந்தார்கள். என்னையும் என் எட்டு வயது மகளையும் பாலியல் வல்லுறவு செய்தார்கள். நான் ஊர் மக்களிடம் நியாயம் கேட்டேன். மக்கள் திரண்டுபோய் காவல் துறையை நெருக்கினார்கள்.
மூன்று நாட்கள் தயக்கத்துக்குப் பிறகு புகாரை ஏற்றுக்கொண்டது காவல் துறை. காவல் துறையை எல்லாம் மதிக்க முடியாது என்றார்கள் ராணுவத்தினர். இரண்டாண்டுகளாக நீதிமன்ற அடுக்குகளில் ஏறினோம். ஆனால் கடைசியில் ராணுவ நீதிமன்றம்தான் விசாரிக்க வேண்டும் என்று தீர்ப்பு சொல்லிவிட்டார்கள்” என்று ஒரு ஆய்வு மாணவியிடம் குமுறியிருக்கிறார் அந்தக் காஷ்மீரத்துத் தாய்.
பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளும் அவை தண்டனைக்குட்படுத்தப்படாத நிலையும் பங்காளாதேஷ், இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், இலங்கை ஆகிய ஐந்து நாடுகளில் எப்படி இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வதற்காக நடத்தப்பட்ட ஆய்வுகளைத் தொகுப்பு நூல்களாக வெளியிட்டிருக்கிறது டெல்லியைச் சேர்ந்த ஜுபான் பதிப்பகம். அதற்கான வெளியீட்டு விழாவில் ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவி பகிர்ந்துகொண்ட அனுபவம்தான் இது.
சிறையா, பணிநீக்கமா?
சிங்கத்தின் குகைக்குள்ளிருந்து மீண்ட ஆடுகளைப்போல இருந்துள்ளது அந்தக் குடும்பம். ராணுவ நீதிமன்றம் போனதையும் அந்தப் பெண்கள் விவரித்திருக்கின்றனர். “எங்கே பார்த்தாலும் ராணுவம், ராணுவம், ராணுவம் மட்டும்தான். ஏழு நாள் அங்கே தங்கியிருந்தோம். 30 பேருக்கும் மேல் இருந்த ராணுவ அதிகாரிகளுக்கு முன்னாலே ராணுவ நீதிமன்றம் தினமும் விசாரித்தது.
நாங்க சொல்றதுதான் உண்மைன்னு ஏத்துக்கிட்டாங்க. என் கணவரிடம் ‘தப்பு செஞ்சவங்கள ஜெயிலுக்கு அனுப்பவா, டிஸ்மிஸ் செய்யவா?’ ன்னு கேட்டார் நீதிபதி. ‘டிஸ்மிஸ் செய்யுங்கள் ஐயா, அப்போதான் எங்கள மாதிரி வேற யாரும் பாதிக்கப்படாம இருப்பாங்க’ என்றார் அவர். அவங்கள டிஸ்மிஸ் செஞ்சுட்டாங்க” என்று சிங்கத்தை ஜெயித்த கதையை கண்கள் பளபளக்க சிலிர்ப்புடன் சொன்னார்களாம் அவர்கள்.
காஷ்மீரத்து மாணவி கஜாலா வழியாக அந்தத் தாயின் சிலிர்ப்பு அரங்கில் அமர்ந்திருந்தவர்களின் உடல்களுக்குள்ளே பாய்ந்தது. கஜாலா அதோடு விடவில்லை. பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் என்ன ஆனார்கள் என்றும் தேடியிருக்கிறார். அவர்கள் மீண்டும் ராணுவத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர் என்பதை அவர் அறிந்தார். ஆனால் அதை இன்றுவரை அந்தக் குடும்பத்தினருக்கு அவர் தெரிவிக்கவில்லை.
குற்றமா, ஒழுங்கீனமா?
பணியில் ஒழுங்கீனம் என்ற அடிப்படையில்தான் ராணுவ நீதிமன்றம் பாலியல் குற்றங்களை விசாரிக்கிறது. அதை ஒரு குற்றமாகப் பார்க்கவில்லை என்று கஜாலா புரிந்துகொண்டார். அதனால்தான் ராணுவத்தினர் பாலியல் வல்லுறவு உள்ளிட்ட மனித உரிமை மீறல்களின் குற்றங்களை ராணுவ நீதிமன்றம்தான் விசாரிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
காஷ்மீரத்துத் தாய் வெளியே வந்து போராடினார். ஆனால், தன்னைத்தானே தனக்குள்ளே புதைத்துக்கொள்பவர்கள்தானே அதிகம். அதனால் பாலியல் வன்முறை பற்றிய புள்ளிவிவரங்கள் உலக அளவில்கூடத் துல்லியமாக வெளிவருவது கடினம்.