Showing posts with label Economy. Show all posts
Showing posts with label Economy. Show all posts

Friday, 5 August 2016

ஜிஎஸ்டி என்றால் என்ன?


நாடு சுதந்திரமடைந்தபிறகு வரி விதிப்பில் மேற்கொள்ளப்படும் மிகப் பெரிய மாற்றம் இதுவாகும். நாடு முழுவதும் ஒருமுனை வரி விதிப்பைக் கொண்டு வரும் வகையில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட உள்ளது. இதன் முக்கிய அம்சங்கள்:

* இது ஒரே சீரான சரக்கு மற்றும் சேவைகளுக்கு விதிக்கப் படும் மறைமுக வரி விதிப்பாகும். இது நாடு முழுவதற்கும் ஒரே அளவாக இருக்கும். பல முன்னேறிய நாடுகள் இத்தகைய வரி விதிப்பு முறையைத்தான் பின்பற்றுகின்றன. உற்பத்தி, விற்பனை, நுகர்வு ஆகிய அனைத்துக்கும் ஒரே முனை வரி விதிப்பைக் கொண்ட ஒருங்கிணைந்த வரி விதிப்பாகும்.

* மத்திய அரசு விதிக்கும் உற்பத்தி வரி, சேவை வரி, உற் பத்தி மற்றும் சுங்கத்துறையில் விதிக்கப்படும் கூடுதல் வரி, சிறப்பு கூடுதல் சுங்க வரி, செஸ், சர்சார்ஜ் உள்ளிட்ட அனைத்து வரி விதிப்புகளும் நீக்கப்பட்டு ஒரு முனை வரியாக விதிக்கப் படும்.

* மாநில அரசு விதிக்கும் மதிப்பு கூட்டு வரி (வாட்) மத்திய வரி, வாங்கும்போது வரி, நுழைவு வரி, பொழுதுபோக்கு வரி, விளம்பரங்கள் மீதான வரி, லாட்டரி, பந்தயம், சூதாட்டம், மாநில அரசு விதிக்கும் பிற வரி விதிப்புகளுக்கு மாற்றாக இது அமையும்.

* அதிக வரிச் சுமையைக் குறைப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். பொதுவாக மத்திய, மாநில அரசுகள் பொருள் உற்பத்தி மதிப்பை அடிப்படை யாகக் கொண்டு வரி விதிப்ப தில்லை. இருப்பினும் பல்வேறு நிலைகளில் வரி விதிப்புக்கு உள்ளாக்கப்படும். இது நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத் தியை (ஜிடிபி) மறைமுகமாக பாதிக்கிறது. வரி ஏய்ப்பு, குறைந்த வரி ஆகியவற்றை தவிர்ப்பதோடு தொழில் புரிவதை எளிதாக்கும்.

* 2011-ம் ஆண்டு வடிவமைக் கப்பட்ட ஜிஎஸ்டி மசோதா வரை வில் கச்சா எண்ணெய், பெட் ரோல், டீசல், எரிவாயு, விமான எரிபொருள் மற்றும் மதுபானங் கள் ஜிஎஸ்டி வரி விதிப்பு பட்டியலில் இடம்பெறவில்லை.

* ஜிஎஸ்டி தொடர்பாக மத்திய, மாநில அரசுகளிடையே ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்க்க ஜிஎஸ்டி சமரச தீர்வு ஆணையம் ஏற்படுத்தப்படும். மாநிலங்களுக்கு இப்புதிய வரி விதிப்பு முறையால் ஏற்படும் வரி வருவாய் இழப்பு குறித்து இது ஆராயும். ஆனால் 2014-ல் கொண்டு வரப்பட்ட திருத்தத்தில் ஆணையத்துக்கு இத்தகைய அதிகாரம் நீக்கப்பட்டுள்ளது.

* 2014-ல் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தில் மதுபான வகைகள் ஜிஎஸ்டி பட்டியலில் இடம்பெறவில்லை.

* மாநிலங்கள் சில முக்கிய பொருள்கள் மீது வரி விதிப்பைக் குறைக்கலாம் என 2011-ல் அளிக் கப்பட்ட விதி 2014-ல் மேற்கொள் ளப்பட்ட திருத்தத்தில் முற்றிலு மாக நீக்கப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து பிரிவில் எந்த உணவுப் பொருளும் இடம்பெற முடியாது.

* அதேபோல பஞ்சாயத்து மற்றும் முனிசிபாலிட்டிகளில் பொருள் நுழைவு வரி விதிக்கலாம் என்ற விதிமுறையும் 2014 ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தில் முற்றிலுமாக நீக்கப்பட்டுவிட்டது.

Monday, 1 August 2016

பழைய வீடுகள் வாங்குவது லாபமா?

நகரங்கள் வேகவேகமாக வளர்ந்துவரும் சூழலில் நகரத்துக்குள் புதிய வீடோ அடுக்குமாடி வீடோ வாங்குவது பலருக்கும் பெருங்கனவுதான். நகரத்துக்குள் வீடும் வேண்டும்; விலையும் குறைவாக இருக்க வேண்டும் என்று எண்ணம் கொண்டவர்கள் கொஞ்சம் அதிகம். அப்படி நினைப்பவர்களுக்குக் கட்டப்பட்ட பழைய வீடுகளை வாங்குவதே ஒரே வழி.
பழைய அடுக்குமாடி வீடு
சென்னை போன்ற பெருநகரங்களில் பழைய வீடு வாங்கலாம் என்றால், முதலில் நினைவுக்கு வருவது உயர்ந்து நிற்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகள்தான். அடுக்குமாடிக் குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகம் என்பதோடு, தனி வீடு வாங்க நிறைய பணம் செலவாகக்கூடும். எனவே, சில பல லட்சங்களில் வீடு வாங்க வேண்டும் என்றால் அடுக்குமாடி வீடே நல்ல தேர்வு.
என்ன விலையில் கிடைக்கும்?
பழைய வீடுகள் அல்லது அடுக்குமாடி வீடுகளை வாங்கும்போது பல விஷயங்களையும் கவனிக்க வேண்டும். சென்னை பள்ளிக்கரணையில் பழைய வீடு ஒன்றை விலைக்கு வாங்கிய பாலமுருகனின். தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். “கொஞ்சம் விலை குறைவாக வாங்க வேண்டும் என்பதற்காகப் பழைய அடுக்குமாடி வீடு வாங்கினேன். பழைய வீடு என்றாலும் மிகவும் பழைய வீட்டை வாங்கினால், அது நிறைய செலவு வைக்கவும் செய்யும். வீட்டின் வயது 15 ஆண்டுகளுக்குள் உட்பட்டதாக இருப்பது நல்லது. வீடு அமைந்திருக்கும் இடம், கட்டிடத்தின் வயது, கட்டிடத்தின் பராமரிப்பு, கட்டிடத்தின் வலிமை போன்ற விஷயங்களை வைத்து வீட்டின் விலையை முடிவு செய்ய வேண்டும். இதைப் பொறுத்து அந்தப் பகுதியில் விற்பனை செய்யப்படும் புதிய வீட்டின் விலையைவிட 25 முதல் 40 சதவீதம் குறைவாகக் கிடைக்கலாம்” என்று அவர் கூறினார்.
கவனிக்க வேண்டிய அம்சங்கள்
ஒரு வேளை 5 ஆண்டுகள் வயதான வீடு என்றால் 15 முதல் 20 சதவீதம் வரை விலை குறைவாகக் கிடைக்கவும் வாய்ப்புகள் உண்டு. வீடு மறுவிற்பனை எனும்போது, வீட்டில் வில்லங்கம் எதுவும் இருக்கிறதா என்பதைக் கட்டாயம் பார்க்க வேண்டும். இப்போதெல்லாம் பலரும் வீட்டுக் கடன் எடுத்தே வீட்டை வாங்குகிறார்கள். பல ஆண்டுகள் தவணை செலுத்துகிறார்கள். எனவே அசல் பத்திரங்கள் வங்கியில் இருக்கும். எனவே அசல் பத்திரத்தை வாங்கிப் பார்க்க வேண்டும். அப்படியில்லையென்றால் அந்த வங்கியின் அனுமதி பெற்று, அவர்கள் சொல்லும் நிபந்தனையின்படி வீட்டை வாங்கலாம்.
மேலும் வீட்டின் தாய்ப் பத்திரம் உள்ளிட்ட பல ஆவணங்களையும் இந்தத் துறையில் நிபுணத்துவம் பெற்றவர் அல்லது வழக்கறிஞரிடம் காட்டி ஆராயவும். ஒரு வேளை வங்கிக் கடன் முழுமையாகச் செலுத்தப்பட்ட பிறகு ஆவணம் தொலைந்துவிட்டது, நகல் பத்திரம் இருக்கிறது என்று சொன்னால் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். விலை கொஞ்சம் குறைவாகக் கிடைத்தாலும், இதுபோன்ற வீட்டை வாங்காமல் இருப்பதே நல்லது. வீட்டை வாங்குவதற்கு முன்பு சொத்து வரி, தண்ணீர் வரி உள்ளிட்ட வரியினங்களுக்குப் பணத்தைச் செலுத்தியிருக்கிறார்களா என்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள்.
தனி வீடு
இதுவே தனி வீடு என்றால் மனையின் சந்தை விலையோடு, கட்டிடத்தின் வயதைப் பொறுத்து வீட்டின் மதிப்பு இருக்கும். பழைய தனி வீடு என்றால், உண்மையான மதிப்பை அறிய சிவில் பொறியாளரைக் கொண்டு ஆராய்வது நல்லது. இதிலும் வீட்டின் மதிப்பை உறுதிசெய்தால், மேற்கூறிய எல்லா விஷயங்களும் தனி வீட்டுக்கும் பொருந்தும்.
வங்கிக் கடன்
பழைய வீட்டுக்கு வீட்டுக் கடன் கிடைக்குமா என்ற சந்தேகம் இருக்கும். பழைய வீடு வாங்க வங்கிகளும் வீட்டு வசதி நிறுவனங்களும் தாராளமாகக் கடன் தருகின்றன. பொதுவாக அடுக்குமாடிக் குடியிருப்பின் ஆயுளைப் பொறுத்து வங்கிக் கடன் கிடைக்கும். 15 முதல் 20 ஆண்டுகள் வயதுள்ள வீடாக இருந்தாலும் கடன் கிடைக்கும். மற்றபடி புதிய வீடு வாங்க வழங்கப்படும் வீட்டுக் கடனுக்கு உள்ள நிபந்தனைகளே பழைய வீடு வாங்கவும் பொருந்தும்.
வங்கிகளின் புள்ளிவிவரங்களின்படி வீட்டுக் கடன் வாங்குபவர்களில் சுமார் 15 முதல் 20 சதவீதம் பேர் பழைய வீடுகளை வாங்குவதாகக் கூறப்படுகிறது.

Monday, 18 July 2016

பொருள்தனைப் போற்று 25: மண்ணெல்லாம் பொன்னாக..!

இந்திய விவசாயம் ஒரு வகையில், தன்னுடைய கடந்த கால வெற்றிக்குக் குறிப்பாய்ப் பசுமைப் புரட்சிக்குப் பலிகடா ஆகி இருக்கிறது..!' என்று நான் சொல்லவில்லை. இந்த ஆண்டு வெளியிடப்பட்ட பொருளாதார அறிக்கை (எகனாமிக் சர்வே) கூறுகிறது. இது ஒரு, அரசு ஆவணம் என்பதால், இதில் உள்ள விவரங்களின் அடிப்படையில்தான் விவசாயம் குறித்து விவாதிக்க இருக்கிறோம்.

1966-67-ல், பசுமைப் புரட்சிக்குச் சற்று முன்னர், இந்தியாவில் பால், கோதுமை உற்பத்தி, அமெரிக்க உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்குதான் இருந்தது. 2013-14-ல், அமெரிக்காவை விடவும், நாம் 60 சதவீதம் அதிகம் உற்பத்தி செய்திருக்கிறோம்.

ஆனாலும் ஒரு மிகப் பெரிய சிக்கலைச் சந்திக்க வேண்டி உள்ளது. இந்திய விளைநிலங்களின் பெரும் பகுதியை, நெல், கோதுமை, கரும்பு உற்பத்தியே ஆக்கிரமித்துள்ளது. இவை, அதிக நிலப்பரப்பு, தண்ணீர், உரம் தேவைப்படுகிற பயிர்கள்.

இம்மூன்றிலும் நம்முடைய உற்பத்தித் திறன் பிற நாடுகளைக் காட்டினும் மிகக் குறைவு. ஆனால் பயறு வகைகளில் நாம் நல்ல உற்பத்தித் திறன் கொண்டிருக்கிறோம். பொதுவாக நம் மக்களிடையே புரதச் சத்துக் குறைபாடு பரவலாகக் காணப்படுகிறது. இதற்கு, பருப்பு வகைகளின் நுகர்வு குறைவாக இருப்பதே காரணம்.

இப்போதைக்கு நெல், கோதுமை, கரும்பு ஆகியன தேவைக்கு அதிகமாகவே உற்பத்தி ஆகிறது. பயறு வகைகளில் அப்படி இல்லை. இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். நுகர்வு குறைவாக இருக்கும்போதே இந்த நிலை!

பாதகம் செய்யாத பருப்பு
பருப்பு வகைகளை விளைவிக்க, குறைந்த இடமும் குறைவான தண்ணீருமே தேவைப்படும். அதிக விலையில் நல்ல சந்தையும் இருக்கிறது. ஆனாலும் பாசன வசதிகள் மிகுந்த இடங்களில் எல்லாம், மூன்று முக்கியப் பயிர்களை மட்டுமே நமது விவசாயிகள் நாடுகிறார்கள்.
பயறு வகைகளைப் பயிர் செய்வதில் நமக்கிருக்கும் தயக்கம் நீங்க வேண்டும். நமது அணுகுமுறையில் மாற்றம் வேண்டும் என்று, குறையாக அல்லாமல், ஓர் ஆலோசனையாக முன் வைக்கிறது ஆய்வறிக்கை. எல்லா மாநிலங்களிலும் இதற்கான மண்வளம், பருவச் சூழல் உள்ளிட்டவை பொருந்திவருமா என்பது ஆய்வுக்குரியது.

பிற நாடுகள், நம்மை விடவும் குறைந்த நீரைப் பயன்படுத்தி, அதிக உற்பத்தித் திறன் கொண்டவையாக இருக்கின்றன. ஆகவே, ‘குறைந்த உள்ளீட்டில், நிறைந்த பயன்' (less input - maximum output) எனும் கோட்பாட்டை வலிமையாக வலியுறுத்துகிறது அறிக்கை.

நெல், கோதுமை, கரும்புப் பயிரீட்டில், சீனா, பிரேஸில் நாடுகளைக் காட்டிலும் 2 முதல் 4 மடங்கு அதிகத் தண்ணீரை நாம் பயன்படுத்துகிறோம்.

இங்குள்ள வெப்பம், அதன் காரணமாய் ஆவியாகும் தண்ணீரின் அளவு ஆகியன ஆய்வில் கொள்ளப்பட்டனவா என்பது தெரியவில்லை.
விவசாயத்துக்கென‌ மானிய விலையில் மின்சாரம் வழங்கப்படுவதும், தண்ணீர் விரயத்துக்கு ஒரு காரணம் என்கிறது ஆய்வறிக்கை.

‘நாசா'வின் ஆய்வுப்படி, இந்தியாவின் ‘தண்ணீர் அட்டவணை' ஒவ்வோர் ஆண்டும் 0.3 மீட்டர் அளவுக்குக் குறைந்துகொண்டே வருகிறது. 2002 - 2008 காலத்தில், 109 கியூபிக் கி.மீ. மேலான நிலத்தடி நீர் பயன்படுத்தி இருக்கிறோம்.

தண்ணீர் விரயமாவது தடுக்கப்பட வேண்டும். அதற்கு, வாய்க்கால் வழி ஓடி நெல்லுக்கும் பாய்கிற, மரபு வழி நீர்ப் பாசனை முறை மாற வேண்டும்.

தெளிப்பான், சொட்டு நீர்ப் பாசனம் போன்ற பாசன முறைகள் பரவலாக்கப்பட வேண்டும்.

‘வானம் பார்த்த பூமி'தான் நம் விவசாயிகளின் மிகப் பெரும் சவால். இந்த ஆபத்தைச் சமாளிப்பதற்கு அரசின் ஆலோசனைகள் பெரிதும் உதவக்கூடும். ஆனாலும், அரசின் கடமை அத்துடன் முடிந்துவிடக் கூடாது.

நாடெங்கும் நீர்ப்பாசனக் கட்டமைப்பு வலுப்படுத்தப்பட வேண்டும். ஆறு, ஏரி, குளங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு முறையாகப் பராமரிக்கப்பட வேண்டும். நதி நீர்ப் பங்கீடு, நதி நீர் இணைப்புக்கு முன்னுரிமை தந்து விரைந்து செயல்படுத்தப்பட வேண்டும்.

வறட்சி, வெள்ளம் போன்ற இயற்கை இடர்பாடுகளை எதிர்கொள்வதில், தொழில்முறை அணுகுமுறை வேண்டும்.

குறைந்தபட்சம் குறைந்த விலை
நமது வேளாண்குடி மக்கள் சந்திக்கிற மிக முக்கிய பிரச்சினை குறைந்தபட்ச‌ ஆதரவு விலை (Minimum Support Price). கரும்பு நீங்கலாக, 23 பயிர்கள் இதன் கீழ் வருகின்றன. கரும்புக்கான குறைந்தபட்ச விலையை, நேரடியாக அரசே நிர்ணயிக்கா விட்டாலும், கொள்முதல் செய்யும் சர்க்கரை ஆலைகள், அரசு சொல்லும் குறைந்தபட்ச விலையை, விவசாயிகளுக்குச் சட்டப்படி தந்தே ஆக வேண்டும்.

பல சமயங்களில், அரசு நிர்ணயிக்கிற குறைந்தபட்ச கொள்முதல் விலை, கட்டுப்படி ஆவதில்லை. அதனால் பெரும் இழப்பு ஏற்படுகிறது. அவ்வப்போது அதிகரித்து நிர்ணயித்தாலும், எப்போதுமே தாங்கள் எதிர்பார்க்கிற நியாயமான ஏற்றம் இருப்பதே இல்லை என்று விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

விவசாயிகளை மிரட்டிவரும் கடன் தொல்லைகளுக்கு, ஆதரவு விலை அவர்களுக்கு ஆதரவாக இல்லை என்பதும் ஒரு காரணம்.

விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்வதில் தொடர்ந்து நிலவிவரும் தற்போதைய குழப்பமான முறை மாற வேண்டும். விவசாயிகளை உள்ளடக்கிய அவர்களின் பிரச்சினைகளை நன்கு உணர்ந்த நிபுணர் குழுவிடம் ஒப்படைத்தால் இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும். துரதிர்ஷ்டவசமாக இது, அதிகாரிகள் குழுவாகவே நின்று போய் விடுகிறது.

எந்தப் பிரச்சினைக்கும் கள நிலவரம் அறியாத நிர்வாகிகள், நிரந்தரத் தீர்வு எதையும் அளிக்கவே முடியாது. சுதந்திர இந்தியா இதனை உணர்ந்து கொண்டதாகவே தெரியவில்லை.

ரணம் தராத நிவாரணம்
அவ்வப்போது கடன் தள்ளுபடி அறிவிப்பு வந்து சற்றே ஆறுதல் தந்தாலும், அனேகமாக ஒவ்வொரு முறையுமே அது, பல தற்கொலைகளுக்குப் பிறகு, காலம் தாழ்ந்த நடவடிக்கையாகவே அமைந்து விடுகிறது. இடர்ப்பாடுகள் மீது வழங்கப்படும் நிவாரணம், பருவம் முடிந்து விளைச்சல் பணம் எப்போது வருமோ, அப்போதே கிடைக்க வகை செய்தல் வேண்டும். ஆனால் பல மாதங்கள், ஆண்டுகள் கழித்து, துன்பத்தை அனுபவித்த பிறகே, நிவாரணம் வழங்கப்படும் என்பது என்ன நீதி?

அப்போதைக்கு அப்போதே உடனடி நிவாரணம் கிடைக்கிற வகையில், வேளாண் மேலாண்மை முறை கொண்டு வரப்பட வேண்டும்.

சிறு துண்டுகளாகப் பிளவு பட்டுக் கிடக்கும் நிலங்கள் (fragmented lands), மந்த கதியில் நடைபெறும் வேளாண் ஆராய்ச்சி, மின்சாரம் மற்றும் உரத் தட்டுப்பாடு, விவசாயத் தொழிலாளர் தட்டுப்பாடு, நிலம் கையகப்படுத்துதல் சட்டம் தொடங்கி, சமூகம் சார்ந்த உள்ளூர்ப் பிரச்சினைகள் வரை, அச்சமூட்டும் ஆபத்துகளின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

பயிர்க் காப்பீட்டுத் திட்டம், வங்கிக் கடன்கள், தேசிய வேளாண் சந்தை என்று பல நல்ல முயற்சிகளும் நிகழத்தான் செய்கின்றன.

ஆரோக்கியமான குறைந்தபட்ச பொருளாதார ஆதரவு உறுதியாக்கப்பட்டால்,
நமது விவசாயிகள், நிச்சயமற்ற எதிர்காலம் என்கிற இருளில் இருந்து வெளியில் வந்து, நம்பிக்கையுடன் சேற்றில் கால் வைப்பார்கள். அப்போதுதான், அடுத்த தலைமுறையினரும் ஆனந்தமாய் விவசாயத்தைத் தொடர்வார்கள். இல்லையேல், மாற்று வேலை தேடி மாநகரங்களுக்கு இளைய தலைமுறை படையெடுப்பதைத் தடுக்க முடியாது.

விவசாயத் தொழிலை விட்டு, கூட்டம் கூட்டமாக நகரத் தொடங்கிவிட்டால், இந்தியப் பொருளாதாரம் என்னவாகும்? ஆயிரம்தான் இருந்தாலும், நமது வாழ்வு, தாழ்வைத் தீர்மானிப்பது விவசாயம்தான். இந்த அடிப்படை உண்மை, பலருக்கு உறைத்ததாகத் தெரியவில்லை.

எல்லாச் சூழ்நிலைகளையும் எதிர்கொள்கிற, அத்தனை விவசாயிகளையும் உள்ளடக்கிய, ஒட்டுமொத்த வேளாண் கொள்கை இன்னமும் பரிணமிக்கவில்லை. இப்படி ஒன்று வந்தால்தான், விவாதங்கள் மறைந்து, விடிவு பிறக்கும்.

எல்லாப் போட்டித் தேர்வுகளிலும், விவசாயம் தொடர்பான கேள்விகள், மிக முக்கிய இடம் வகிக்கின்றன. இந்தத் துறையில், கருத்துகள், எதிர்க் கருத்துகள், அர்த்தமுள்ள ஆலோசனைகள், ஆழமான விளக்கங்கள் எனப் பலவற்றை இன்றைய இளைஞர்கள் கொண்டிருக்க வேண்டும் என்கிற வகையில்தான் தேர்வுகள் அமைக்கப்படுகின்றன. இது ஒரு வரவேற்கத்தக்க நல்ல செய்தி.

Tuesday, 5 July 2016

டிஜிட்டல் இந்தியாவில் யாருக்கு முதலிடம்?


டிஜிட்டல் இந்தியா என்கிற மிகப்பெரிய சவாலை இந்திய அரசு கையில் எடுத்திருக்கிறது. இதற்கேற்ப பல நிறுவனங்களும் இந்தியாவில் தங்களை விஸ்தரித்து வருகின்றனர். சர்வதேச அளவிலான மின்னணு தயாரிப்பாளர்களும் டிஜிட்டல் இந்தியா என்கிற மிகப்பெரிய சந்தையை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் ஏற்கெனவே இந்திய சந்தையில் இருக்கும் இரண்டு மிகப்பெரிய நிறுவனங்களுக்குள் ஒரு போட்டியே நடந்து வருகிறது.

ஆம் இந்தியாவின் டிஜிட்டல் துறையில் நம்பர் 1 ஆக இருப்பது யார் என்பதில் கூகுளுக்கும் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த இணையதள நிறுவனங்களுக்கு இந்தியா மிகப் பெரிய சந்தை என்பது குறிப்பிடத்தக்கது. தவிர சமீப காலங்களில் இரண்டு நிறுவன தலைவர்களுமே இந்தியா வந்து சென்றுள்ளது கவனிக்கத்தக்கது.
தங்களது அடுத்த கட்ட வளர்ச்சிக்கு ஏற்ப அமெரிக்காவுக்கு வெளியே மிகப் பெரிய சந்தையை உருவாக்கும் முனைப்பில் இரண்டு நிறுவனங்களுமே ஈடுபட்டுள்ளன. இந்த வகையில் இந்தியாவில் அதிக அளவிலான பயனாளிகள், விளம்ப ரம், இணைய தொடர்பு வசதிகள் போன்றவை இந்த நிறுவனங்களுக்கு மிகப் பெரிய சந்தை என்பதில் சந்தேகமே இல்லை.

உலக அளவில் இணையதள பயனாளிகளின் எண்ணிக்கையில் அமெரிக்காவுக்கு அடுத்து இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இணையதள பயன்பாடு ஆண்டுக் காண்டு அதிகரித்து வருகிறது என் கிறது இன்டர்நெட் டிரண்ட்ஸ் என்கிற அறிக்கை. இந்தியாவுக்கு அடுத்த இடத்தில்தான் சீனா உள்ளது.

நவம்பர் 2015ல் காம்ஸ்கோர் வெளியிட்ட தர வரிசையில் இந்த துறையில் கூகுள்தான் நம்பர் 1 இடத்தில் இருக்கிறது. இணையதள தேடு பொறி சந்தையில் அமெரிக்காவில் மட்டும் 63.9 சதவீதத்தை கூகுள் வைத்துள்ளது. 24.7 கோடி பேர் பயன்படுத்துகின்றனர். மே 2016 நிலவரப்படி 510 பில்லியன் டாலர் சொத்து மதிப்பை வைத்துள்ளது.

சமூக வலைதளமாக ஃபேஸ்புக் நிறுவனமும் சற்றும் சளைக்காமல் முன்னேறி வருகிறது. இதன் தற்போதைய சந்தை மதிப்பு 340 பில்லியன் டாலர். அதே சமயத்தில் மார்ச் 2016 நிலவரப்படி தினசரி 100 கோடிக்கும் அதிகமான பயனாளிகள் ஃபேஸ்புக் தளத்தில் புழங்குகின்றனர் என்கிறது அறிக்கை. இந்தியாவில் மட்டும் தினசரி 7.3 லட்சம் பேர் இண்டர்நெர் மூலமும், 6.8 லட்சம் பேர் மொபைல் மூலம் தினசரி பயன்படுத்துகின்றனர். மாதாந்திர அளவில் சுமார் 1.4 கோடி பேர் புழங்குகின்றனர்.

ஆனால் இந்திய சந்தையில் ஏகபோகமாக உருவாவது அவ்வளவு சுலபமில்லை. சந்தையைக் கைப்பற்ற வேண்டுமானல் மொபைல் டேட்டா விலை குறைப்பு இருக்க வேண்டும் என்கிற ஒரு ஆய்வு.
ஃபேஸ்புக் இந்தியாவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள உமங் பேடி `சரியான நேரத்தில், சரியான செய்திகளோடு இந்திய பயனாளிகளுக்கு புதிய திட்டங்கள் வைத்துள்ளோம்.’ என்று குறிப்பிட் டுள்ளார். கூகுள் நிறுவனமும் மெகா பிளான்களை வைத்துள்ளது. ஒவ்வொரு இந்தியருக்கும் இண்டர்நெட் என்கிற முழுக்கத்தை வைத்துள்ளது. டிஜிட்டல் இந்தியா என்கிற இந்த அரசின் திட்டங்களோடு இணைந்து செயல்பட திட்டமிட்டு வருகிறது.

கூகுள் தலைவர் சுந்தர் பிச்சையும், ஃபேஸ்புக் தலைவர் மார்க் ஜூகர்பெர்க்கும் பிரதமர் மோடியை சந்தித்த போது இந்தியா வில் தங்களது திட்டங்களை விவரித் திருக்கலாம். ஆனால் இவர்களில் டிஜிட்டல் இந்தியா சந்தையில் முன்னிலையில் இருக்கபோவது யார்?