பிளஸ் 2 பொதுத் தேர்வில் 1,129 மதிப்பெண்கள் எடுத்தும் உயர்கல்வியில் சேர வசதியின்றி மூணாறு தேயிலைத் தோட்ட தொழிலாளியின் மகள் தவித்து வருகிறார்.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் மூணாறில் தனியார் தேயிலை தோட்டத்தில் வேலை செய்து கொண்டு எஸ்டேட் நிர்வாக குடியிருப்பில் வசித்துவரும் தனுஸ்ராணி மகள் வி. சினேகா (17). இவர் தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே கன்னிசேர்வைபட்டியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளியான காந்திஜி வித்யாபீடம் மேல்நிலைப் பள்ளியில் படித்து பிளஸ் 2-வில் 1,129 மதிப்பெண்கள் எடுத்து பள்ளியின் முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றுள்ளார். பாடவாரியாக இவர் எடுத்த
மதிப்பெண்கள் : தமிழ்- 179, ஆங்கிலம்- 166, வரலாறு- 196, பொருளாதாரம்- 194, வணிகவியல்- 194, கணக்குப் பதிவியல்- 200.
நல்ல மதிப்பெண்கள் எடுத்தி ருந்தும் வசதியில்லாததால் கல்லூ ரியில் சேர முடியாமல் தவித்து வருகிறார்.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் மாணவி வி. சினேகா கூறியதாவது: எங்களது பூர்வீகம் நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில். ஆனால், பிழைப்புக்காக கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பே, மூணாறில் குடியேறி விட்டோம். நான் எனது பெற்றோருக்கு ஒரே மகள். எனது தந்தை 15 ஆண்டுகளுக்கு முன்பே எங்களை நிராதரவாக விட்டுவிட்டு சென்று விட்டார். எனது தாயாரும், பாட்டியும் தேயிலைத் தோட்டத்தில் கூலி வேலை செய்து, என்னை 10-ம் வகுப்பு வரை படிக்க வைத்தனர். அதற்கு மேல் படிக்க வசதியில்லாததால், காந்திஜி வித்யாபீடம் மேல்நிலைப் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ் 1, பிளஸ் 2 படித்தேன். எனது ஏழ்மை நிலையை அறிந்த பள்ளி நிர்வாகம் விடுதிச் செலவை ஏற்றது. கடந்த ஆண்டு, எனது பாட்டி இறந்து விட்டார். எனது அம்மாவுக்கும் மார்பகப் புற்றுநோய் வந்துள்ளது. இதனால், நான் கல்லூரியில் சேர்ந்து படிக்க பண வசதியில்லை. யாரேனும் உதவி செய்தால் மேல்படிப்பு படிக்க முடியும். இல்லாவிட்டால், எனது தாயாருடன் சேர்ந்து கூலி வேலைக்குச் செல்ல வேண்டியதுதான் என விரக்தியுடன் தெரிவித்தார்.