Wednesday 22 June 2016

யூ.பி.எஸ்.சி. தேர்வை வென்றவர்கள்- 4: நூலகத்தில் படித்தே ஐ.ஆர்.எஸ். ஆனவர்!

நான்காம் வகுப்பு படிக்கும்போதே நூலகத்தில் புத்தகங்களைத் தேடி வாசிக்க ஆரம்பித்தவர் ஆர்.எல்.அருண் பிரசாத். 2010 பேட்ச்சில் ஐ.ஆர்.எஸ். பாஸ் செய்தார். சென்னையில் மத்திய கலால் வரி ஏய்ப்பு தடுப்புத் துறையிலும், தாம்பரத்தின் மத்திய கலால் மற்றும் சேவை வரித்துறை சரகத்திலும் உதவி ஆணையராகப் பணியாற்றினார். தற்போது, சென்னை விமான நிலையத்தில் சுங்க வரித் துறையின் துணை ஆணையராகப் பணியாற்றுகிறார்.

திருவள்ளூர் மாவட்டத்தின் பெரியபாளையத்தை சேர்ந்தவர் அருண் பிரசாத். அம்மா கஸ்தூரி, அப்பா லோகநாதன் ஆகிய இருவருமே பள்ளித் தலைமை ஆசிரியர்கள். அரசு ஆண்கள் பள்ளி பிறகு ரெட் ஹில்ஸின் டி.ஆர்.பி.சி.சி. பள்ளி என பிளஸ் டூ வரை பயின்றார் அருண். அதன் பிறகு காஞ்சிபுரத்தின் அருள்மிகு மீனாட்சி அம்மன் பொறியியல் கல்லூரியில் பி.இ. மெக்கானிக்கல் படித்தார். எம்.பி.ஏ. படிக்க விரும்பி ‘கேட்’ நுழைவுத் தேர்வு எழுதி, கிடைக்கவில்லை. சென்னை தனியார் நிறுவனம் ஒன்றில் மேற்பார்வையாளராக இரண்டாண்டுகள் பணியாற்றினார். இதுவரையும் இல்லாத யூ.பி.எஸ்.சி. மீதான விழிப்புணர்வு இவருக்கு, நூலகம் செல்லும் பழக்கத்தால் கிடைத்துள்ளது.

கன்னிமாராவில் அறிமுகமான குடிமைப்பணி
“ஒரு ஞாயிற்றுக்கிழமை சாவகாசமாக ஏதேனும் ஒரு நாவலை வாசிக்க சென்னை கன்னிமாரா நூலகம் சென்றேன். முதல் தளத்தில் இருந்த ‘குடிமைப்பணி’ பிரிவைப் பார்த்து குழம்பினேன். உள்ளே பலரும் அமைதியாகப் படித்துக்கொண்டிருந்தனர். யார் இவர்கள்? இது என்ன பிரிவு? இங்கு என்னமாதிரியான நூல்கள் கிடைக்கும்? என்ற ஆர்வம் எழுந்தது. ஆனால் அங்கு படித்துக் கொண்டிருந்தவர்களிடமிருந்து இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் கிடைக்கவில்லை. அன்று மாலை கன்னிமாரா எதிரில் உள்ள சாலையோர தேநீர் கடையில் அருள்செல்வத்தைச் சந்தித்தேன். அவர்தான் யூ.பி.எஸ்.சி. தேர்வு முறை குறித்த அத்தனை விளக்கங்களையும் கொடுத்தார்” என்கிறார் அருண் பிரசாத்.

தொடர்ந்து அருள்செல்வத்துடன் ஏற்பட்ட சந்திப்பினால், யூ.பி.எஸ்.சி. எழுத முடிவு செய்தார் அருண். இதற்கான பயிற்சியை டெல்லியில் பெற தன் பணியை ராஜினாமா செய்தார். பயிற்சிக்கு இடையில் 2003-ல் எடுத்த முதல் முயற்சியில் பிரிலிம்ஸில் தேற முடியவில்லை. பயிற்சி முடித்து சென்னை திரும்பியவர், இரண்டாவது முயற்சியில் நேர்முகத் தேர்வு வரை சென்றார். இதில், 15 நிமிடம்கூட ஆங்கிலத்தில் பேச முடியாமல் திணறினார். மூன்றாவது முயற்சியிலும் நேர்முகத் தேர்வில் வெற்றி கை நழுவிப் போனது. அடுத்த முயற்சியில் தன் ஆங்கில அறிவை மேலும் வளர்க்க முடிவு செய்தார். இதற்காக, 2006-ல் சென்னை அண்ணா நகரில் ‘இம்பாக்ட்’ ஐ.ஏ.எஸ். கோச்சிங் இன்ஸ்டிடியூட்டை நண்பர்களுடன் இணைந்து தொடங்கினார். ஆனால், 4 -வது முயற்சியில் அருண், பிரிலிம்ஸும் பாஸ் செய்யவில்லை.

ஏழாவது முயற்சியில் வெற்றி
தோல்விக்குக் காரணம் கோச்சிங் இன்ஸ்டிடியூட்டை நடத்தியதுதான் என நினைத்து அதிலிருந்து விலகினார். பிறகு, பணத் தேவைக்காகத் தனியார் நிறுவனத்தில் பகுதிநேர வேலைக்குச் சேர்ந்தார். இத்துடன், 5 ஆவது முயற்சிக்காகப் படித்தார். “அப்போது, அம்மா நோய்வாய்ப்பட்டு உயிரிழந்தார். இந்தத் துயரிலிருந்து மீள முடியாமல் ஐந்தாவது முறையும் தோல்வியடைந்தேன். அடுத்து ஆறாவது முயற்சியில் நேர்முகத் தேர்வில் தேறவில்லை.

இனியும் யூ.பி.எஸ்.சி. எழுத வேண்டாம், ஏதாவது வேலைக்குப்போய் கல்யாணம் செய்துகொண்டு சாதாரண வாழ்க்கையை வாழும்படி குடும்பத்தினர் வலியுறுத்தினர். இதை ஏற்காமல் வீட்டுக்குச் செல்வதை தவிர்த்தேன். பகுதிநேரப் பணியையும் விட்டு விட்டேன். நண்பர்களிடம் ரூபாய் 25,000 கடன் பெற்று அதை ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்து அவ்வப்போது அதில் செலவிற்கானப் பணத்தை எடுத்தேன். இந்த நெருக்கடியான காலகட்டத்தில் என்னுடைய சகோதரியும் அவரது கணவரும் உதவினார்கள். கடைசியாக எடுத்த ஏழாவது முயற்சியில் ஐ.ஆர்.எஸ். கிடைத்தது” எனப் பெருமூச்சு விடுகிறார் அருண்.

ஆறு முறை தோல்விக்கான காரணங்கள்
ஆறு முயற்சிகளிலும் தோல்வி அடையக் காரணம் தமிழை விருப்பப்பாடமாக எடுக்காததுதான் எனக் கருதுகிறார் அருண். இத்தனைக்கும் கல்லூரிக் காலங்களில் மாணவர்களுக்கான ஒரு சிற்றிதழ் நடத்தியவர். பொது நிர்வாகம் மற்றும் புவியியல் ஆகியவற்றில் புலமை இல்லாமலே விருப்பப் பாடமாக எடுத்ததாகவும், புரிதல் திறன் காரணமாக அதில் தேர்ச்சி பெற்றதாகவும் எண்ணுகிறார். இதனுடன் தொடக்கத்தில் இருந்த பயில்திறனை தக்கவைத்துக்கொள்ளத் தவறியதாகவும் கூறுகிறார்.

யூ.பி.எஸ்.சி. தேர்வு எழுதுபவருக்கு அவசியமான ஆளுமை வளர்ச்சித் (Personality Development) திறனை வளர்த்துக் கொள்ளவில்லை என வருந்துகிறார். “பயம் இன்றிப் பேசுவது, சொல்ல வருவதைத் தெளிவாக எடுத்துச் சொல்வது, முடிவெடுக்கும் திறன் ஆகியவற்றை வளர்த்துக்கொள்வது அவசியம். இந்தத் திறன்கள் நான் தனியார் நிறுவனத்தில் நிர்வாகியாகப் பணியாற்றியபோதுதான் கிடைத்தன. இது கல்வி முடித்து நேரடியாக யூ.பி.எஸ்.சி. எழுதுவோருக்கும், பணி செய்தபடியே படித்து எழுதுபவர்களுக்கும் இடையில் உள்ள பெரிய வித்தியாசம்” என்கிறார் அருண்.

வெற்றிக்கு அடித்தளமிட்ட நாவல்கள்
“பள்ளிப் பாடங்களைப் படிக்கச் சொல்லி அம்மா எப்போதுமே வற்புறுத்தியதில்லை. அப்பா நூலகத்துக்குப்போய் படி எனச் சொல்லிக்கொண்டே இருப்பார். இதனால் நான்காம் வகுப்பு முதல் நூலகம் செல்ல ஆரம்பித்தேன். அங்கு முத்து காமிக்ஸ், கோகுலம், அம்புலி மாமா, கல்கண்டு போன்றவற்றை தினந்தோறும் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் வாசிப்பேன். அடுத்த கட்டத்துக்கு என்னைக் கொண்டுசென்றவர் கல்கண்டு ஆசிரியரான தமிழ்வாணன். அதனை அடுத்து, சுஜாதா, ஜெயகாந்தன் போன்றவர்களின் நாவல்களையும் படிக்கத் தொடங்கினேன். இவற்றைப் படித்து ரசித்ததால் கிடைத்த புரிதல் திறன் யூ.பி.எஸ்.சி. தேர்விலும் பெரிதும் உதவியது” என்கிறார் அருண்.

தன்னுடைய முயற்சிகளையும் அனுபவங்களையும் ‘யுவர் பேஷன் யுவர் கரியர்’ (‘Your Passion Your Career’) எனும் நூலாக எழுதியுள்ளார் விடா முயற்சிக்கு அடையாளமான அருண் பிரசாத்