Showing posts with label Real Estate. Show all posts
Showing posts with label Real Estate. Show all posts

Monday, 1 August 2016

பழைய வீடுகள் வாங்குவது லாபமா?

நகரங்கள் வேகவேகமாக வளர்ந்துவரும் சூழலில் நகரத்துக்குள் புதிய வீடோ அடுக்குமாடி வீடோ வாங்குவது பலருக்கும் பெருங்கனவுதான். நகரத்துக்குள் வீடும் வேண்டும்; விலையும் குறைவாக இருக்க வேண்டும் என்று எண்ணம் கொண்டவர்கள் கொஞ்சம் அதிகம். அப்படி நினைப்பவர்களுக்குக் கட்டப்பட்ட பழைய வீடுகளை வாங்குவதே ஒரே வழி.
பழைய அடுக்குமாடி வீடு
சென்னை போன்ற பெருநகரங்களில் பழைய வீடு வாங்கலாம் என்றால், முதலில் நினைவுக்கு வருவது உயர்ந்து நிற்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகள்தான். அடுக்குமாடிக் குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகம் என்பதோடு, தனி வீடு வாங்க நிறைய பணம் செலவாகக்கூடும். எனவே, சில பல லட்சங்களில் வீடு வாங்க வேண்டும் என்றால் அடுக்குமாடி வீடே நல்ல தேர்வு.
என்ன விலையில் கிடைக்கும்?
பழைய வீடுகள் அல்லது அடுக்குமாடி வீடுகளை வாங்கும்போது பல விஷயங்களையும் கவனிக்க வேண்டும். சென்னை பள்ளிக்கரணையில் பழைய வீடு ஒன்றை விலைக்கு வாங்கிய பாலமுருகனின். தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். “கொஞ்சம் விலை குறைவாக வாங்க வேண்டும் என்பதற்காகப் பழைய அடுக்குமாடி வீடு வாங்கினேன். பழைய வீடு என்றாலும் மிகவும் பழைய வீட்டை வாங்கினால், அது நிறைய செலவு வைக்கவும் செய்யும். வீட்டின் வயது 15 ஆண்டுகளுக்குள் உட்பட்டதாக இருப்பது நல்லது. வீடு அமைந்திருக்கும் இடம், கட்டிடத்தின் வயது, கட்டிடத்தின் பராமரிப்பு, கட்டிடத்தின் வலிமை போன்ற விஷயங்களை வைத்து வீட்டின் விலையை முடிவு செய்ய வேண்டும். இதைப் பொறுத்து அந்தப் பகுதியில் விற்பனை செய்யப்படும் புதிய வீட்டின் விலையைவிட 25 முதல் 40 சதவீதம் குறைவாகக் கிடைக்கலாம்” என்று அவர் கூறினார்.
கவனிக்க வேண்டிய அம்சங்கள்
ஒரு வேளை 5 ஆண்டுகள் வயதான வீடு என்றால் 15 முதல் 20 சதவீதம் வரை விலை குறைவாகக் கிடைக்கவும் வாய்ப்புகள் உண்டு. வீடு மறுவிற்பனை எனும்போது, வீட்டில் வில்லங்கம் எதுவும் இருக்கிறதா என்பதைக் கட்டாயம் பார்க்க வேண்டும். இப்போதெல்லாம் பலரும் வீட்டுக் கடன் எடுத்தே வீட்டை வாங்குகிறார்கள். பல ஆண்டுகள் தவணை செலுத்துகிறார்கள். எனவே அசல் பத்திரங்கள் வங்கியில் இருக்கும். எனவே அசல் பத்திரத்தை வாங்கிப் பார்க்க வேண்டும். அப்படியில்லையென்றால் அந்த வங்கியின் அனுமதி பெற்று, அவர்கள் சொல்லும் நிபந்தனையின்படி வீட்டை வாங்கலாம்.
மேலும் வீட்டின் தாய்ப் பத்திரம் உள்ளிட்ட பல ஆவணங்களையும் இந்தத் துறையில் நிபுணத்துவம் பெற்றவர் அல்லது வழக்கறிஞரிடம் காட்டி ஆராயவும். ஒரு வேளை வங்கிக் கடன் முழுமையாகச் செலுத்தப்பட்ட பிறகு ஆவணம் தொலைந்துவிட்டது, நகல் பத்திரம் இருக்கிறது என்று சொன்னால் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். விலை கொஞ்சம் குறைவாகக் கிடைத்தாலும், இதுபோன்ற வீட்டை வாங்காமல் இருப்பதே நல்லது. வீட்டை வாங்குவதற்கு முன்பு சொத்து வரி, தண்ணீர் வரி உள்ளிட்ட வரியினங்களுக்குப் பணத்தைச் செலுத்தியிருக்கிறார்களா என்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள்.
தனி வீடு
இதுவே தனி வீடு என்றால் மனையின் சந்தை விலையோடு, கட்டிடத்தின் வயதைப் பொறுத்து வீட்டின் மதிப்பு இருக்கும். பழைய தனி வீடு என்றால், உண்மையான மதிப்பை அறிய சிவில் பொறியாளரைக் கொண்டு ஆராய்வது நல்லது. இதிலும் வீட்டின் மதிப்பை உறுதிசெய்தால், மேற்கூறிய எல்லா விஷயங்களும் தனி வீட்டுக்கும் பொருந்தும்.
வங்கிக் கடன்
பழைய வீட்டுக்கு வீட்டுக் கடன் கிடைக்குமா என்ற சந்தேகம் இருக்கும். பழைய வீடு வாங்க வங்கிகளும் வீட்டு வசதி நிறுவனங்களும் தாராளமாகக் கடன் தருகின்றன. பொதுவாக அடுக்குமாடிக் குடியிருப்பின் ஆயுளைப் பொறுத்து வங்கிக் கடன் கிடைக்கும். 15 முதல் 20 ஆண்டுகள் வயதுள்ள வீடாக இருந்தாலும் கடன் கிடைக்கும். மற்றபடி புதிய வீடு வாங்க வழங்கப்படும் வீட்டுக் கடனுக்கு உள்ள நிபந்தனைகளே பழைய வீடு வாங்கவும் பொருந்தும்.
வங்கிகளின் புள்ளிவிவரங்களின்படி வீட்டுக் கடன் வாங்குபவர்களில் சுமார் 15 முதல் 20 சதவீதம் பேர் பழைய வீடுகளை வாங்குவதாகக் கூறப்படுகிறது.

Tuesday, 19 July 2016

தவணை முறையில் மனை வாங்கலாமா?

வீட்டு உபயோகப் பொருள்களான டி.வி., ஏ.சி. என எல்லாவற்றையும் இன்றைக்குத் தவணை முறையில் வாங்குவது அதிகரித்து வருகிறது. அதுபோலத்தான் வீட்டு மனையும் தவணை முறையில் வாங்கப்பட்டு வருகிறது. இன்றைக்கு ஏற்பட்டுள்ள ரியல் எஸ்டேட் தேக்க நிலையால் இது மந்தமாக உள்ளது. ஆனாலும்கூட மனையின் விலை அதிகரிக்கவில்லையே தவிர குறையவில்லை.

சொத்து வாங்க நினைப்பவர்கள் பெரும்பாலும் வங்கிக் கடனையே நம்பியிருக்கிறார்கள். பின்னர் வீடு கட்டுவதற்கான முதலீடாகவும் மனை இருக்கிறது. முதலில் மனைகளை வாங்கிப் போட்டுப் பின்னர் ஓரளவு விலை ஏறியவுடன் மனையின் ஒரு பாகத்தை விற்று, அதில் கிடைக்கும் பணத்தை வைத்து வீடு கட்டிக்கொள்ளும் எண்ணத்தில் சிலர் வீட்டு மனைகளை வாங்குகிறார்கள்.

இல்லையெனில் மாதாந்திரத் தவணைத் திட்டத்தில் இணைந்து ஒரு வீட்டு மனையைச் சொந்தமாக்கிகொள்ள நினைக்கிறார்கள். தவணை முறையில் நிலம் வாங்கும்போது பல விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
எதிர்காலத் தேவையை மனத்தில் கொண்டு மனை வாங்கும்போது நீங்கள் நிலம் வாங்கும் இடத்தின் எதிர்கால வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதை ஓரளவு விசாரித்து அறிந்துகொள்ள வேண்டும்.

அதுபோல நீங்கள் வாங்கப் போகும் மனைக்கான ஆவணங்களைச் சரிபார்த்துக்கொள்ள வேண்டும். வில்லங்கச் சான்று, பட்டா, ரசீதுகள் என மனை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்துக்கொள்ள வேண்டும். மூலப் பத்திரத்தைச் சரிபார்த்துக்கொள்வதும் மிக அவசியம்.

வீட்டுமனைப் பிரிவில் மனை வாங்கும்போது மனைகளை விற்கும் நிறுவனத்தால் மூலப் பத்திரத்தைக் கொடுக்க முடியாது. பல மனைகளாகப் பிரித்து விற்பதால் மொத்த மனைகளுக்கு ஒரே மூலப் பத்திரம்தான் இருக்கும். ஆகையால் மூலப் பத்திரத்தை உங்களுக்குத் தர மாட்டார்கள். அப்படித் தர மறுக்கும்பட்சத்தில் மூலப் பத்திரத்தின் நகலை வாங்கிச் சரி பார்த்துக்கொள்ள வேண்டும்.

மற்றொரு காரியம் இவ்வாறு மனைகள் வாங்கும்போது முறையான அங்கீகாரம் பெறப்பட்டுள்ளதா என்பதையும் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். அந்த இடத்திற்கான வாரிசுதாரர்கள் அனைவரிடமும் சம்மதம் பெறப்பட்டுள்ளதா என்பதையும் பார்த்துக்கொள்ள வேண்டும்.

தவணை முறையில் மனை வாங்கும்போது ஒப்பந்தத்தை 20 ரூபாய் முத்திரைத்தாளில் பதிவு செய்துகொள்ள வேண்டும். அந்த ஒப்பந்தத்தில் நீங்கள் வாங்கப் போகும் வீட்டுமனையின் விலை, மாத, மாதம் செலுத்த வேண்டிய தவணைத் தொகை, தவணைக் காலம் போன்ற விவரங்களைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.
மனை எண்ணையும், மனையின் பரப்பளவையும் சேர்த்துக் குறிப்பிட வேண்டும். நீங்கள் வாங்கியிருக்கும் மனையின் விலை திடீரெனக் கூடும்பட்சத்தில் மீதியிருக்கும் தவணைத் தொகையை மனையை விற்பனைசெய்பவர் அதிகமாக்கும் வாய்ப்பு உள்ளது. அதனால் தவணைத் தொகை குறித்து ஒப்பந்தப் பத்திரத்தில் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.

வாங்கியிருக்கும் நிலம், முன்பு விவசாயப் பயன்பாட்டிற்கான நிலமாக இருந்திருந்தால் அதில் கட்டிடம் கட்டுவதற்கு முறையான அனுமதி பெற வேண்டும். அதையும் சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.

வீட்டுமனையை விற்பவர் சொத்தின் நேரடி உரிமையாளராக இல்லாமல் விற்கும் அதிகாரமான ‘பவர் ஆப் அட்டர்னி’ பெற்றிருந்தால் அதைச் சரிபார்த்துக்கொள்வது அவசியம். இடையில் பவர் ஆஃப் அட்டார்னி ரத்து செய்யப்பட்டுள்ளதா என்பதையும் தெரிந்து தெளிவு பெற வேண்டும்.

நீங்கள் செலுக்கும் மாதத் தவணைத் தொகைக்கு உரிய ரசீது வாங்கிக்கொள்ள வேண்டும். தவணைத் தொகையைச் செலுத்தி வரும் நிலையில் இடையில் பணம் கிடைக்கும் பட்சத்தில் முழுப் பணத்தையும் செலுத்துவது நமக்கு லாபமானதல்ல.

தேவையின் பொருட்டுப் பணம் செலுத்துவதாக இருந்தால் பணமாகக் கொடுக்க வேண்டாம். காசோலை, வரைவோலை போன்று வங்கி மூலமாகச் செலுத்த வேண்டும். தவணை முறையில் மனை வாங்குவதில் இவ்வளவு விஷயங்கள் உள்ளன. இவற்றை முறையாகச் செய்தால், மனை வாங்குவதில் உள்ள வில்லங்கங்களையும் தடுக்க முடியும்.