Showing posts with label Japan. Show all posts
Showing posts with label Japan. Show all posts

Thursday, 7 July 2016

கடல் மேலே விமான நிலையம்!



விமான நிலையத்தைக் கடலில் அமைக்க முடியுமா? அதுவும் சர்வதேச விமான நிலையத்தை அமைக்க முடியுமா? ‘முடியும்’ என நிரூபித்துக் காட்டியது ஜப்பான். கடல் நடுவே செயற்கைத் தீவு ஒன்றை உருவாக்கி, அதன் மீது பிரம்மாண்டமான விமான நிலையத்தையும் அமைத்திருக்கிறது ஜப்பான்.

ஜப்பானில் கன்சாய் மாகாணம் உள்ளது. இங்குள்ள ஒசாகா கடல் பகுதியில்தான் இந்த விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்தின் பெயர் ‘கன்சாய்’. உலகிலேயே கடலில் அமைக்கப்பட்ட முதல் விமான நிலையம் இதுதான். இத்தாலியைச் சேர்ந்த ரென்கோ பியானோ என்ற கட்டடக்கலை நிபுணரின் வடிவமைப்பை அடிப்படையாகக்கொண்டு இந்த விமான நிலையம் கடலில் கட்டப்பட்டுள்ளது.

விமான நிலையத்தின் மொத்தப் பரப்பளவு 4 லட்சத்து 53 ஆயிரத்து 993 சதுர மீட்டர். உயரம் 36.64 மீட்டர். ஒரு அடித்தளம், நான்கு மேல் தளங்களுடன் இந்த விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. 1987-ம் ஆண்டு விமான நிலையத்துக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கின.

குறிப்பிட்ட பகுதியில் கடல் நீரை வெளியேற்றிவிட்டு, கல் மற்றும் மண்ணைக் கொண்டு நிரப்பும் முறையில் கட்டுமானப் பணிகள் நடந்தன. இதற்காக ஜப்பானில் உள்ள மலைக் குன்றுகள் தகர்க்கப்பட்டு மண்ணும் கல்லும் கொட்டப்பட்டன. இந்தப் பணிகள் முடிந்த பிறகு கட்டடம் கட்டும் பணிகள் 1991-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கியது. பணிகள் முடிந்து 1994-ல் விமான நிலையம் திறக்கப்பட்டது.

கடல் மேலே பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட இந்த விமான நிலையத்தை உருவாக்க எவ்வளவு செலவாகியிருக்கும்? அந்தக் காலகட்டத்தில் 67 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவானதாம்.

Tuesday, 31 May 2016

இசையில் சாதனை: ரஹ்மானுக்கு ஜப்பானில் கவுரவம்!

இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஜப்பான் நாட்டின் ஃபுக்குவோகா பரிசு கிடைத்துள்ளது. சர்வதேச அளவில் இசைத்துறையில் சாதித்ததற்கு இந்த விருது அவருக்கு அளிக்கப்படவுள்ளது.
ஜப்பானின் ஃபுக்குவோகா பரிசு, ஃபுக்குவோகா என்ற நகரத்தின் சார்பிலும், யோகடோபியா என்ற அமைப்பின் சார்பிலும் வழங்கப்படுகிறது. ஆசிய கலாச்சாரத்தை பாதுகாக்கும் தனிநபர்களுக்கு அல்லது அமைப்புக்கு இந்த பரிசு வழங்கப்படுகிறது.
ஃபுக்குவோகா பரிசு மூன்று பிரிவுகளில் வழங்கப்படுகிறது. கல்வித்துறை, கலை அல்லது கலாச்சாரம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு கிராண்ட் ப்ரைஸ் வழங்கப்படுகிறது. ஆசிய கண்டம் சார்ந்த மனித, சமூக அறிவியல் ஆராய்ச்சியில் சாதித்தவர்களுக்கு அகாடமிக் ப்ரைஸ் வழங்கப்படுகிறது. ஆசியாவின் பலவகையான கலை மற்றும் கலாச்சாரத்துக்கு பங்களித்தவர்களுக்கு ஆர்ட்ஸ் அண்ட் கல்ச்சர் ப்ரைஸ் வழங்கப்படுகிறது.
இதில், ஏ.ஆர்.ரஹ்மான் கிராண்ட் ப்ரைஸ் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படுள்ளார். இந்த விருது குறித்து பேசியுள்ள ஏ.ஆர்.ரஹ்மான், விருதுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஏ.ஆர்.ரஹ்மான் பேசுகையில், " ஃபுக்குவோகா பரிசு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த கவுரவத்துக்கு நன்றி. உங்கள் அனைவரது அன்பைப் பற்றியும் தெரிந்து கொண்டதில் மிக்க சந்தோஷம். உங்கள் நகரத்துக்கு வரும் நாளை எதிர்நோக்கியுள்ளேன்" என்றார்.