Wednesday, 13 July 2016

வேலை வேண்டுமா?- எல்லைப் பாதுகாப்புப் படையில் வேலை

பி.எஸ்.எப். எனப்படும் எல்லைப் பாதுகாப்புப் படையினர் நமது நாட்டின் எல்லையோரங்களைப் பாதுகாக்கும் மிக முக்கியமான பணியில் ஈடுபட்டுவருகிறார்கள். இந்தப் படைப் பிரிவில் காவலர்கள், தலைமைக் காவலர்கள், துணைச் சப்-இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டர், உதவி கமாண்டன்ட், கமாண்டன்ட், டி.ஐ.ஜி. எனப் பல்வேறு நிலைகளில் ஊழியர்களும், அதிகாரிகளும் பணியாற்றுகிறார்கள். எல்லைப் பாதுகாப்புப் படையில் 152 துணைச் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களும், 470 தலைமைக் காவலர் பணியிடங்களும் (ரேடியோ ஆபரேட்டர்) போட்டித்தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன.

யார் விண்ணப்பிக்கலாம்?
துணைச் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு ரேடியோ மற்றும் டிவி டெக்னாலஜி, எலெக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் பாடங்களில் டிப்ளமா படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தலைமைக் காவலர் பணிக்கு 2 ஆண்டு கால ஐ.டி.ஐ. (ரேடியோ மற்றும் டிவி) அல்லது எலெக்ட்ரானிக்ஸ் பயிற்சி முடித்திருக்க வேண்டும். பிளஸ் டூ-வில் இயற்பியல், வேதியியல், கணிதம் படித்தவர்களும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பைப் பொறுத்தவரையில், இரு பணிகளுக்குமே 18 முதல் 25-க்குள் வயது இருக்க வேண்டும். மத்திய அரசின் இடஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி, எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். தகுதியான நபர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் உடல்திறன் தேர்வு அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவார்கள். இதற்குப் பி.எஸ்.எப். இணையதளத்தை (www.bsf.nic.in) பயன்படுத்தி ஜூலை 15-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வுக்குத் தயாரா?
எழுத்துத்தேர்வில் முதல்கட்டத் தேர்வான அப்ஜெக்டிவ் தேர்வு செப்டம்பர் 25-ம் தேதியும், விரிவாக விடையளிக்கும் தேர்வு (Descriptive Type) நவம்பர் 18-ம் தேதியில், உடல்திறன் தேர்வு 2017, மார்ச் 20-ம் தேதியில் நடைபெறும். அப்ஜெக்டிவ் தேர்வில், இயற்பியல், கணிதம், வேதியியல், ஆங்கிலம் (பிளஸ் டூ அளவிலான) ஆகிய 4 பகுதிகளில் தலா 25 கேள்விகள் வீதம் மொத்தம் 100 வினாக்கள் கேட்கப்படும்.
2-வது தேர்வான விரிவாக விடையளிக்கும் தேர்வில் (துணை சப் இன்ஸ்பெக்டர்) பிளஸ் டூ இயற்பியல், வேதியியல், கணிதம், எலெக்ட்ரானிக்ஸ் ஆகிய பகுதிகளிலிருந்தும், அதேபோல், தலைமைக் காவலர் பணிக்கு பிளஸ் டூ இயற்பியல், வேதியியல், ஆங்கிலம் ஆகிய பகுதிகளிலிருந்தும் கேள்விகள் கேட்கப்படும். தேர்வுமுறை, பாடத்திட்டம், சம்பளம், பல்வேறு சலுகைகள் உள்ளிட்ட கூடுதல் விவரங்களை பி.எஸ்.எப். இணையதளத்தில் விரிவாகத் தெரிந்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment