சாலையில் கிடந்த துணிப்பையில் ரூ.4 லட்சத்து 90 ஆயிரத்து 700-ஐ கண்டெடுத்த, பல்லடம் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் அதை காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்.
இது குறித்து போலீஸார் கூறியதாவது: பல்லடம்- மாணிக்காபுரம் பிரிவில், நேற்று முன்தினம் மாலை போக்குவரத்து உதவி ஆய்வாளர் டி.முரளிதரன் போக்கு வரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியில் மஞ்சள் பை ஒன்று கிடந்துள்ளது. அதை திறந்து பார்த்தபோது, அதில் கட்டு கட்டாக பணம் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, பல்லடம் காவல் ஆய்வாளர் தங்கராஜிடம் பணத்தை ஒப்படைத்தார். அதில், ரூ.4 லட்சத்து 90 ஆயிரத்து 700 இருப்பது தெரிந்தது. அப்பகுதியில் பணத்துக்கு யாரும் உரிமம் கோராத நிலையில், முரளிதரன் அளித்த புகாரின் பேரில் பல்லடம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்து டி. முரளிதரன் ‘தி இந்து’விடம் கூறியதாவது: ”முகூர்த்த நாள் என்பதால், மாணிக்காபுரம் பிரிவில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தோம். அப்போது, அவ்வழியில் கிடந்த பையில் பணம் இருந்தை நானும், என்னுடன் இருந்த போக்குவரத்து காவலர் மற்றும் காவல் நண்பர் குழுவைச் சேர்ந்த 2 பேரும் பார்த்தோம். அங்கிருந்த யாரும் பணத்துக்கு உரிமை கோரவில்லை. ஆகவே பல்லடம் காவல்நிலையத்தில் பணம் ஒப்படைக்கப்பட்டு, வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.
No comments:
Post a Comment