தமிழகத்தில் முதல் முறையாக தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகம் கண்காணிப்பு கேமராக்கள் வளையத்துக்குள் கொண்டு வரப்படுகிறது. இதற்காக கண் காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் உள்ள பெரிய மீன்பிடித் துறைமுகங்களில் தூத்துக்குடி மீன்பிடித் துறைமுக மும் ஒன்று. இங்கு 250 விசைப் படகுகள் நிறுத்தப்பட்டு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. தினமும் சரசாரியாக 300 டன் வரை மீன்கள் பிடித்து வரப்படுகின்றன. இந்த மீன்கள் ரூ. 1 கோடி முதல் ரூ. 1.5 கோடி வரை ஏலம் போகின்றன.
மேலாண்மைக் குழு
தூத்துக்குடி மீன்பிடித் துறை முகத்தில் மாவட்ட ஆட்சியர் ம. ரவிக்குமாரின் தீவிர முயற்சி யால், தமிழகத்திலேயே முதல் முறையாக மீன்பிடித் துறைமுக மேலாண்மைக் குழு அமைக்கப்பட்டது. துறைமுகத்தில் உள்ள அனைத்து சொத்துக்கள் மற்றும் பராமரிப்பு பணிகள் அனைத்தும் 29.5.2013 முதல் மீன்பிடித் துறைமுக மேலாண்மைக் குழு வசம் ஒப்படைக்கப்பட்டன.
மாவட்ட ஆட்சியர் தலைமை யிலான ஆலோசனைக் குழு, மீன்வளத்துறை இணை இயக்குநர் தலைமையிலான மேலாண்மைக் குழு ஆகிய இரு குழுக்கள் மீன்பிடித் துறைமுகத்தின் அனைத்து பணிகளையும் கவனித்து வருகின்றன.
ரூ. 2 கோடி சேமிப்பு
மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தப்படும் படகுகளுக்கான வாடகை, இருச்சக்கர வாகன நிறுத்துமிட வருமானம், கேன்டீன் வாடகை, படகு பழுதுபார்க்கும் பட்டறை வாடகை என மீன்பிடித் துறைமுக மேலாண்மைக் குழுவு க்கு பல்வேறு வகையில் வருவாய் கிடைக்கிறது.
கடந்த 3 ஆண்டுகளில் குழுவின் சேமிப்பு ரூ. 2 கோடியை எட்டியுள்ளது. மீன்பிடித் துறைமுகத்தில் நடை பெறும் அனைத்து மேம்பாட்டு பணிகளுக்கும் இந்த சேமிப்பு நிதியில் இருந்தே செலவு செய்யப்படுகிறது. இதன் காரணமாக சிறு சிறு பணிகளுக்கு அரசை நம்பியிருக்காமல், மேலாண்மைக் குழு நிதியில் உடனுக்குடன் செய்ய முடிகிறது.
விடிய விடிய பரபரப்பு
மீன்பிடித் துறைமுகத்தை பொறுத்தவரை இரவு முழுவதும் விடிய விடிய பரபரப்பாக காணப்படும். அதிகாலை 5 மணிக்கு மேல் படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க புறப்பட்டுச் செல்லும். இரவு 9 மணிக்கு மேல் படகுகள் கரை திரும்பும். அதன் பிறகு படகுகளில் பிடித்து வரும் மீன்கள் அதிகாலை வரை ஏலம் விடப்படும்.
மீன்களை வாங்குவதற்கு கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வருவார்கள். இதனால் இரவு நேரத்தில் மீன்பிடித் துறைமுகம் சுறுசுறுப்பாக நடைபெறும்.
கண்காணிப்பு கேமரா
மீன்பிடித் துறைமுகத்தில் நடைபெறும் சிறு சிறு மோதல் சம்பவங்கள், திருட்டு உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் மற்றும் சில விரும்பத்தகாத சம்பவங்களை தடுக்க மீன்பிடித் துறைமுகத்தில், மேலாண்மைக் குழு நிதியில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் அறிவுறுத்தினார். அதன்படி தமிழகத்தில் முதல் முறையாக இங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
9 கேமராக்கள்
இது தொடர்பாக அதிகாரிகள் கூறும்போது, மீன்பிடித் துறைமுக வளாகத்தில் 9 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது 5 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மீன்பிடித் துறைமுகத்தின் மையப் பகுதியில் துறைமுகம் முழுவதும் கண்காணிக்கும் வகையில் ஒரு சுழலும் கேமரா பொருத்தப் படவுள்ளது.
இதற்காக உதவி இயக்குநர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து துறைமுக வளாகத் தில் நடைபெறும் அனைத்து சம்பவங்களையும் கண்காணிக்க முடியும்.
No comments:
Post a Comment