ஸ்மார்ட்போன், பலகைக் கணினி மற்றும் மடிக் கணினியின் பரவலான உபயோகம், மின் கழிவு என்ற தலைவலி அதிவேகமாக அதிகரித்து வருகிறது. கடாசப்பட்ட பழைய மாடல்களில் பெரும்பகுதி மின்குப்பைகளாக குவிகின்றன. இப்படி குவியும் மின் குப்பைகளிலிருந்து காலப்போக்கில் பீ.பி.ஏ., அல்லது, 'பிஸ்பினால் ஏ' என்ற வேதிப் பொருளை மண்ணிலும், நீரிலும் கசிய விடுகின்றன. இவற்றை மனிதர்கள் உட்கொள்ள நேர்ந்தால் மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
சமீபத்தில் ஐ.பி.எம்., நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள், பழைய ஸ்மார்ட்போன்கள் உள்ளிட்ட பல மின்னணு சாதனங்களிலுள்ள பிளாஸ்டிக்குகளை, மறுசுழற்சி செய்யும் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். அப்படி மறு சுழற்சி செய்யும் பிளாஸ்டிக்குகள், முன்பைவிட பலமுள்ளவையாக இருப்பதாக ஐ.பி.எம்., விஞ்ஞானிகள் சொல்கின்றனர். மேலும், அவை மருத்துவம், குடிநீர் சுத்திகரித்தல், அதிவேக இணையத் தொடர்புக்கு உதவும் கண்ணாடி இழை வடங்கள் போன்றவற்றை உருவாக்கவும் பயன்படும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். ஐ.பி.எம்.,மின் புதிய முறைப்படி மறு சுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்குகள் குப்பையாக போய் தேங்கினால்கூட அவை பீ.பி.ஏ., கசிவு ஏற்படாது என்றும் விஞ்ஞானிகள் சொல்கின்றனர். இது சீக்கிரம் நடைமுறைக்கு வந்தால் பூமியும், நிலத்தடி நீரும் தப்பிக்கும்!
No comments:
Post a Comment