Thursday 21 July 2016

பெண் கணித மேதைகள்: அறிவியலுக்கு அர்ப்பணித்த வாழ்க்கை

உலகின் முதல் பெண் கணித மேதையாகக் கருதப்படும் ஹைப்பேஷியா கி. பி. 370-ல் எகிப்தில் அலெக்சாண்ட்ரியாவில் தியனுக்கு மகளாகப் பிறந்தவர். கணிதம், வானியல், தத்துவம் போன்ற துறைகளில் சிறந்த ஞானத்தோடு திகழ்ந்தார் தியான். அவர்தான் ஹைப்பேஷியாவுக்கு குருவாக இருந்து அறிவியல், மதம், சமூக சிந்தனைகளையும், கற்பித்தல் முறையையும் சிறப்பாகக் கற்றுக்கொடுத்தார்.

சில ஆண்டுகளிலேயே தனது தந்தையின் ஆற்றலை மிஞ்சினார் ஹைப்பேஷியா. இவரும் மிகச் சிறந்த அறிவியல் ஆசானாக அலெக்ஸாண்ட்ரியாவில் உருவெடுத்தார். தனது வாழ்நாளை அறிவியலின் முன்னேற்றத்துக்காகவே சமர்ப்பித்துக்கொண்டார். இவரது கண்டுபிடிப்புகள் அநேகமாக இன்று அறியப்படாமல் போனது வருந்தத்தக்கது. இருப்பினும் இவரிடம் பயின்ற மாணவர்களில் சிலர் இவரிடம் கற்றதைப் பதிவு செய்துள்ளனர்.

நிதர்சன அறிவியல்
சய்நிசியஸ் என்ற மாணவர் ஹைப்பேஷியாவின் கண்டுபிடிப்புகளைப் பற்றி விரிவாக எழுதியுள்ளார். அவருடைய பதிவுகளிலிருந்து ஹைப்பேஷியாதான் முதன்முதலில் வானியல்மானியை (Astrolabe) கண்டறிந்ததாகத் தெரிகிறது. ஆனால் சில அறிஞர்கள் இவருக்கு முன்னால் வாழ்ந்த கிரேக்க அறிஞர்கள் ஏற்படுத்திய வானியல்மானியை ஹைப்பேஷியா மேம்படுத்தியதாகக் கூறுகின்றனர். எப்படி இருந்தாலும் ஹைப்பேஷியா கண்டறிந்த துல்லியமான வானியல்மானியைப் பயன்படுத்திக் கோள வடிவியல் புதிர்களுக்குத் தீர்வு காணப்பட்டன.

அலெக்ஸாண்ட்ரியாவில் இவரைக் கல்வியின் மறு உருவமாகவே கருதினார்கள். ஹைப்பேஷியா பேரழகு பொருந்தியவர். சிறந்த ஆசிரியர். அவர் வகுப்பு எடுக்கும்போது அறிவியல் பாடத்தைக் குறிப்பிட்ட தேவைக்காக மட்டுமே படிக்காமல், அதன் நடைமுறைப் பயன்பாட்டையும் உணர்ந்து படிக்குமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்துவார். அதே போல நிகழ்கால உதாரணங்களை அறிவியலோடு தொடர்புபடுத்தி வகுப்பு எடுப்பார்.

வானியல்மானியைத் தவிர ‘விண்மீன் காட்டி’(Planisphere), ‘நீர்மானி’ (Hydrometer) எனும் அறிவியல் கருவிகளையும் இவர் கண்டறிந்ததாகக் கூறப்படுகிறது. அபோலோனியஸ் வழங்கிய கூம்பு வெட்டு பாகங்கள் சிந்தனையை மேலும் ஆராய்ந்து அதற்கான எளிய விளக்கத்தை ஹைப்பேஷியா வழங்கினார். இன்றளவும் இச்சிந்தனை பயன்பாட்டில் உள்ளது.

சூரியக் குடும்பம் என முதலில் சொன்னவர்
சூரியன் மையமாக இருக்க கிரகங்கள் நீள்வட்டப் பாதையில் சுழல்கின்றன என அப்போதே கணிதத்தின் துணை கொண்டு ஹைப்பேஷியா கண்டறிந்தார். அதற்குப் பிறகு கிட்டத்தட்ட பத்து நூற்றாண்டுகள் கழித்துத்தான் ஜெர்மானிய அறிவியல் அறிஞர் கெப்லர் இதே போன்ற கோட்பாட்டை முன்வைத்தார். நியூட்டனால் அந்தக் கோட்பாடு நிரூபிக்கப்பட்டது.

ஹைப்பேஷியாவின் வாழ்க்கையை காட்சிப்படுத்தியது 2009-ல் வெளிவந்த ‘அகோரா’ எனும் ஆங்கிலத் திரைப்படம். ஹைப்பேஷியாவின் கணித சாதனைகளுக்காக ‘உலகின் முதல் பெண் கணித மேதை’ என்று அவர் போற்றப்படுகிறார்.

ஆனால் அவருடைய சிந்தனைகளும் செயல்களும் அறிவியல் பூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் இருந்ததனாலேயே கடும் எதிர்ப்புகளைச் சந்தித்தார். குறிப்பாக அவருடைய கண்டுபிடிப்புகள் மத நம்பிக்கைக்கு எதிரானவையாகக் கருதப்பட்டன.

கி.பி.415-ல் கர்த்தினாள் ஸிரிளின் என்பவரின் கட்டளைக்கிணங்க கிறிஸ்துவ மதவெறியர்களின் கும்பல் ஒன்று அவரைக் கொடூரமாகக் கொலை செய்தது என்கிறது வரலாறு.

No comments:

Post a Comment