கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நீலகிரி வன மண்டலத்தில் ஆறு யானைகளை இழந்திருக்கிறோம். ஐந்து இறந்துவிட்டன. ஒன்று பிடிபட்டு முதுமலை முகாமில் இருக்கிறது. வனத் துறையால் பிடிக்கப்பட்டு வளர்ப்பு அல்லது ‘கும்கி’ யானைகளாக மாற்றப்படும் யானைகளையும் நாம் இழப்புகளாகத்தான் கொள்ள வேண்டும். இறந்துபோன யானைகளின் துயரங்களைக் காட்டிலும் பிடிபட்ட யானைகளுக்கான துயரங்கள் மிக அதிகம். காட்டின் நினைவுகளூடாக அலையும் அடிமை வாழ்க்கை அது.
யானை - மனிதன் எதிர்கொள்ளல் சம்பவங்கள் மற்றும் விபத்தில் சிக்கி யானைகள் இறப்பது நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுக்கரை - எட்டிமடை இடையே பெண் யானை ஒன்று ரயில் மோதி இறந்தது. அதற்கு முந்தைய நாள் இதே பகுதியில் பிடிபட்டு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஒற்றை யானையும் கடந்த 21-ம் தேதி இரவு இறந்துவிட்டது. இந்த துயரம் ஆறுவதற்குள் 24-ம் தேதி கேரள எல்லையில் அட்டபாடி பகுதியில் சிகிச்சைக்காக மயக்க ஊசி செலுத்தப்பட்ட இன்னொரு யானை இறந்துவிட்டது. இந்த மூன்று யானைகளின் இறப்புகளை ஆராய்வதன் மூலம், நாட்டின் மொத்த யானைகளின் நிலையையும் மதிப்பிட முடியும்.
யானைகள் ஏன் குடியிருப்புகளுக்குள் வருகின்றன?
வனத்தை அழித்துக் குடியிருப்புகள் உருவாக்கப் பட்டுவிட்டன என்பதே இதற்கான பதில். தவிர, வனங்களுக்குள்ளும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துவிட்டன. வன விலங்குகளுக்கான இந்திய அறக்கட்டளை அமைப்பு, நாடு முழுவதும் 166 வன இணைப்புப் பாதைகளை அடையாளம் கண்டுள்ளது. யானைகள் காலம் காலமாக வலசை செல்லும் மரபு வழிப் பாதைகள் இவை. இவற்றில் 88 இணைப்புப் பாதைகள் மட்டுமே தற்போது இருக்கின்றன.
தமிழக, கேரள, கர்நாடக மாநிலங்களில் கல்லாறு - காந்தப்பள்ளம், நிலம்பூர் - அமரம்பாளையம், சிங்காரா - மசினக்குடி, மாயார் - அவரஹல்லா, கல்லட்டி - சிகூர், அவரஹல்லா - சிகூர், கனியன்புரா - மாயாறு, தலமலை - குத்தியாளத்தூர், தாளவாடி - முத்தஹள்ளி, சாம்ராஜ் நகர் - தலமலை, கரடிக்கல் - மாதேஸ்வரா, தளி, எடையரஹள்ளி, அட்டபாடி, பெரியா, திருநெல்லி - பிரம்மகிரி, பெரியா - கொட்டுயூர், அட்டகட்டி - ஆழியாறு, அய்யர்பாடி நீர்வீழ்ச்சி எஸ்டேட், சிலுவைமேடு - காடாம்பாறை ஆகிய 20 இணைப்புப் பாதைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்தியாவில் இருக்கும் சுமார் 30,000 யானைகளில் சுமார் 15,000 யானைகள் இந்த 20 இணைப்புப் பாதைகளில் மட்டுமே வசிக்கின்றன. தற்போது இவற்றில் சுமார் 15 இணைப்புப் பாதைகள் கடும் ஆக்கிரமிப்புகளில் சிக்கியிருக்கின்றன. எனவே, வேறு வழியின்றியே யானைகள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைகின்றன.
தண்டவாளங்களில் எப்படிச் சிக்குகின்றன?
யானைகள் உயரமான மலைச் சரிவுகளையும் மிகக் குறுகிய பாதைகளையும் பெரும் பள்ளங்களையும் அனாயாசமாகக் கடக்கக் கூடியவை. விலங்குகளில் யானைகளே அதிகளவு நுண்ணுணர்வு கொண்டவை. தமிழகத்தில் நடந்த மூன்று ரயில் விபத்துச் சம்பவங்களிலும் யானைகள் சில மணி நேரங்களுக்கு முன்புதான் விரட்டியடிக்கப்பட்டுள்ளன. கடைசியாக நடந்த விபத்தும் அப்படியே.
விபத்து நடப்பதற்கு முந்தைய தினம் இரவு 10 மணிக்கு குருமலை வனத்திலிருந்து மதுக்கரை மரப்பாலம் பகுதிக்கு குட்டியுடன் 6 யானைகள் வந்துள்ளன. மக்களும் வனத் துறையினரும் அவற்றைப் பட்டாசு வெடித்தும் மேளங்களைத் தட்டியும் விரட்டியுள்ளனர். பீதியும் குழப்பமும் அடைந்த அந்த யானைக் கூட்டம் நாலாபுறமும் சிதறி ஓடியிருக்கிறது. இந்தக் களேபரத்தில்தான் அந்தப் பெண் யானை தண்டவாளத்தைக் கடக்கும்போது விபத்தில் சிக்கிவிட்டது.
மதுக்கரையிலிருந்து கேரள மாநிலம் கஞ்சிக்கோடு வரையிலான 25 கி.மீ. தூரம் கொண்ட வனப் பகுதிக்குள் செல்லும் ரயில் தண்டவாளத்தில் ரயில் மோதி யானைகள் இறப்பது இது முதல்முறை அல்ல. ஏற்கெனவே இரு வேறு விபத்துகளில் ஏழு யானைகள் இறந்திருக்கின்றன. இப்போது இறந்திருப்பது எட்டாவது யானை. இந்த விபத்து நடந்த பிறகு அறிக்கை வெளியிட்டிருக்கும் ரயில்வே நிர்வாகம், ‘ரயில் 35-45 கி.மீ. வேகத்தில்தான் சென்றுள்ளது’என்று சொல்கிறது. ஆனால், ஒருபோதும் அங்கே குறைந்த வேகத்தில் ரயில் சென்றதில்லை என்கிறார்கள் ஆய்வாளர்கள் மற்றும் உள்ளூர் மக்கள். தவிர, ரயில் 35 கி.மீ. வேகத்தில் சென்றிருந்தால் யானை இறக்கும் அளவுக்குச் சேதம் ஏற்பட்டிருக்காது என்கிறார்கள் வன மருத்துவக் குழுவினர்.
மயக்க மருந்தால் இறக்கவில்லை மகராஜ்
‘ஓசை’ அமைப்பின் காளிதாசன் இதற்கான விளக்கத்தைத் தருகிறார். “மகராஜ் என்று பெயரிடப்பட்ட இந்த யானை, டாப்ஸ்லிப் முகாமில் இறந்தது பெரும் புயலைக் கிளப்பியிருக்கிறது. மயக்க ஊசி அதிகம் போடப்பட்டதால் இறந்துவிட்டது என்று குற்றச்சாட்டுகள் எழுகின்றன. உணர்ச்சிவசப்படாமல் அறிவியல்பூர்வமாக யோசித்தால் இந்த விஷயத்தில் மருத்துவக் குழுவின் மீது தவறு இல்லை என்பதை அறியலாம். மகராஜ் யானைக்குப் போடப்பட்டது மயக்க ஊசி அல்ல. இதுபோன்ற மருந்துகளில் இருவகை உண்டு. ஒன்று, யானையை அரைத் தூக்கத்தில் ஆழ்த்தும். இரண்டாவது, யானையை முற்றிலுமாக மயக்கத்தில் ஆழ்த்தும். இதில் இரண்டாவது வகையை அறுவைச் சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சைகளின்போது மட்டுமே செலுத்துவார்கள். மேலும், இதனைச் செலுத்தி மயக்கமடையச் செய்தால் யானையை இடம்பெயரச் செய்ய இயலாது. கிரேனில் கட்டி தூக்கிச் சென்றாலும் யானை இறக்கும் ஆபத்து உண்டு. எனவே, மகராஜ் யானைக்குச் செலுத்தப்பட்டது அரைத் தூக்க மருந்துதான். இந்த மருந்து அதிகபட்சம் 4 மணி நேரம் மட்டுமே வீரியத்துடன் இருக்கும். ஆனால், அந்த யானை பிடிபட்ட 60 மணி நேரம் கழித்தே இறந்திருக்கிறது” என்கிறார் அவர்.
இவ்வாறு பிடிக்கப்பட்ட யானைகளை ‘க்ரால்’எனப்படும் பெரிய கூண்டில் அடைத்து வைப்பார்கள். அங்கு மீண்டும் ஒரு ஊசியைச் செலுத்தி அதன் தூக்கத்தைக் கலைப்பார்கள். கான்கிரீட் மற்றும் உறுதியான மரத்தில் கட்டப்பட்ட கூண்டில் வைத்துதான் ‘மாவுத்து’கள் எனப்படும் பயிற்சியாளர்கள் யானையை ‘கும்கி’அல்லது வளர்ப்பு யானையாக மாற்றுவார்கள். சொல்லப்போனால், யானையின் சுயத்தை அழிக்கும் வதை முகாம் இது. இங்கு அடைக்கப்பட்ட யானைகளுக்கு ஆரம்பத்தில் உணவு தர மாட்டார்கள். கடும் பசியில் யானை துடிக்கும் நிலையில் உணவு கொடுப்பார்கள். இப்படியாக ஒரு மாதத்தில் அந்த யானையை வழிக்குக் கொண்டுவருவார்கள்.
பொதுவாக, கூண்டில் அடைக்கப்பட்ட யானைகள் மிரண்டு அலைபாயும். கடுமையாகப் பிளிறும். ஆக்ரோஷமாகத் தும்பிக்கையை வீசிக் கூண்டை உடைக்க முயற்சிக்கும். வேகமாக ஓடி வந்து நெற்றியாலும் தந்தத்தாலும் கூண்டை முட்டும். போர்க்களம்போல் இருக்கும் அந்த இடம். ஜீவ மரணப் போராட்டம் அது. அனுபவம் மிக்க மாவுத்துகளே அருகில் செல்ல அஞ்சுவார்கள். மகராஜ் யானை நெற்றியில் பலமுறை மோதியதால் மரணம் நேர்ந்திருக்கிறது. யானை மோதியதில் அதன் நெற்றியும் தந்தமும் உடைந்திருக்கின்றன. நெற்றியிலும் தந்தத்திலும் பச்சை நிற பெயின்ட் ஒட்டியிருக்கிறது. கூண்டின் உறுதியான மரம் உடைந்திருக்கிறது. ஆனாலும், உண்மையான காரணம் உடல் கூறாய்வுக்குப் பின்பே உறுதியாகத் தெரியவரும்.
மூன்றாவதாக, கேரள எல்லைக்குள் மயக்க ஊசி செலுத்தப்பட்ட யானை ஒன்று தமிழக எல்லைக்குள் வந்து விழுந்து இறந்திருக்கிறது. இந்த யானையின் வயிற்றுப் பகுதியில் பெரிய காயம் ஒன்று இருந்திருக்கிறது. அதற்குச் சிகிச்சை அளிக்க மயக்க மருந்து செலுத்தியிருக்கின்றனர். இதுகுறித்துப் பேசும் வனத் துறையினர், “காட்டு மாடு போன்ற கொம்புள்ள விலங்குகள் ஏதேனும் குத்தியிருக்கலாம். அதேசமயம், துப்பாக்கிக் குண்டு துளைத்தது போன்றும் இருக்கிறது. ஆனால், உடல் கூறாய்வின்போது குண்டு எதுவும் கிடைக்கவில்லை. காயம் காரணமாகக் கிருமிகள் பரவி, நோய் முற்றிய நிலையில் இதற்கு மரணம் நேரிட்டிருக்கிறது” என்கின்றனர்.
தீர்வுகள் என்ன?
யானைகளின் இணைப்புப் பாதைகளில் இருக்கும் கல்வி நிறுவனங்கள், ஆசிரமங்கள், சுற்றுலா விடுதிகள் என சுமார் 2000-க்கும் மேற்பட்ட கட்டிடங்களை அப்புறப்படுத்த வேண்டும். குறிப்பாக, வனங்களில் உணவு ஆதாரங்களை அதிகரிக்க வேண்டும். இதற்கான ஆராய்ச்சிகளை மேற்கொண்டுவருகிறார் யானைகள் ஆய்வாளர் டாக்டர் அறிவழகன். “மூங்கில், உன்னு, உசிலம், வெட்பாலை, மறுக்காரை, இருவாட்சி, வெட்டாலம் ஆகிய நமது நாட்டு மரங்கள் மற்றும் புற்களே யானையின் உணவு ஆதாரங்கள். ஆனால், கடந்த காலங்களில் வனத் துறையின் தவறான முடிவுகளால் நடப்பட்ட அந்நிய மரங்களான சீகை, தைலம், பைன் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட வேலிக்காத்தான் ஆகிய மரங்களின் தீவிர விதைப் பரவலால், நமது நாட்டு மரங்கள் பெரும்பாலும் அழிந்துவிட்டன. அழகுக்காக ஆங்கிலேயர்களால் கொண்டுவரப்பட்ட அந்நிய செடிகளான லேண்டினா கேமிரா, ஸ்காட்ச் ப்ரூம், ஈப்படோரியம், பார்த்தீனியம் ஆகிய புதர்ச் செடிகள், புல்வெளிகளின் மீது படர்ந்ததால் சூரிய வெளிச்சம் பெற முடியாமல் கணிசமான அளவு புல்வெளிகள் அழிந்துபோயின. இதனால், யானைகளின் உணவாதாரம் சுருங்கிப்போனது. தற்போது அந்நிய மரம், செடிகளை அழிப்பதற்காக வனத் துறையால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மிகச் சிறிய அளவிலேயே செயல்படுத்தப்படுகின்றன. போதிய நிதி ஒதுக்கப்படுவதில்லை. இதனைப் போர்க்கால நடவடிக்கை அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்” என்கிறார் அவர்.
கோவையின் நகர விரிவாக்கம் தவிர்க்க இயலாதது. ஆனால், அது மேற்கு நோக்கி விரிவடைவதுதான் ஆபத்து. கோவையில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரங்களைக் குறி வைத்து நகர்கின்றன ரியல் எஸ்டேட் நிறுவனங்கள். அங்கு நிலத்தின் விலையும் போட்டியும் மிக அதிகம். அதேசமயம், கோவைக்குத் தெற்கேயும் கிழக்கேயும் ஏராளமான நிலங்கள் கிடக்கின்றன. காட்டை ஒட்டி, மலையை ஒட்டி, நீரோடைகளை ஒட்டி வாழ ஆசைப்படும் உல்லாச மனப்பான்மை இது. தமிழகத்தின் பெரும்பான்மைப் பகுதிகளுக்கு நீராதாரங்களை அளிக்கக் கூடிய பவானி, சிறுவாணி, நொய்யல், மோயாறு ஆகிய ஆறுகளின் பிறப்பிடம் மேற்கண்ட மலைகள்தான். மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரங்களில் நகர விரிவாக்கத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால், எதிர்காலத்தில் தமிழகம் பாலைவனமாவதைத் தடுக்க இயலாது.
விவசாயிகள் தொடங்கி மேற்குத் தொடர்ச்சி மலையடிவார மக்களின் வெறுப்புக்குள்ளாகி வருகின்றன யானைகள். இந்த நிலையில், யானைகள் ஏன் நமக்குத் தேவை என்று தெரிந்துகொள்வது அவசியம். இயற்கையின் உயிர்ச் சங்கிலியில் யானை எனும் கண்ணியின் இருப்பு அத்தியாவசியமானது. அடர்ந்த காடுகளில் தங்களது இடப்பெயர்ச்சியின் மூலம் வழித்தடங்களை ஏற்படுத்தித் தருவதே யானைகள்தான். யானைகள் ஏற்படுத்தித் தரும் வழித்தடங்களால்தான் இன்ன பிற உயிரினங்கள் இடம்பெயர முடிகிறது. இனப் பெருக்கம் செய்ய இயல்கிறது. எனவே, யானைகள் இல்லை எனில், பெரும்பாலான வன விலங்குகளும் இல்லை.
யானைகள் கடும் கோடைகளில் காடுகளில் பூமிக்கடியில் இருக்கும் தண்ணீரைக் கண்டறிந்து பள்ளம் தோண்டி உறிஞ்சுகின்றன. இதன் மூலம் பிற உயிரினங்களுக்குத் தண்ணீர் கிடைக்கிறது. யானையின் கழிவு குரங்குகள், இருவாச்சிப் பறவை, கீரிப்பிள்ளை, பட்டாம்பூச்சி உள்ளிட்ட உயிரினங்களுக்கு உணவாகின்றன. யானைகள் நாள் ஒன்றுக்கு சுமார் 30 கி.மீ. இடம்பெயர்வதன் மூலம், அங்கெல்லாம் தனது கழிவுகளால் ஊட்டச் சத்துடன் கூடிய விதைப் பரவல் செய்கிறது. எனவே, வனத்தின் வளர்ச்சியில் யானையின் பங்கு மிகமிக முக்கியம். வனம் இல்லை எனில் தண்ணீர் இல்லை. தண்ணீர் இல்லை எனில் நாம் இல்லை. எனவே, யானைகள் நமக்கு தேவை!
No comments:
Post a Comment