Tuesday, 21 June 2016

பறக்கும் கார்!

இந்த பகுதிக்காக (வாகன உலகத்துக்காக முழுப்பக்கம்) தொடங்கப்பட்டபோது முதலில் இடம்பெற்றது கூகுள் நிறுவனத்தின் டிரைவர் இல்லாத கார். வாகனத் துறையில் பல்வேறு மாற்றங்கள், புதிய தயாரிப்புகள் வந்து கொண்டே இருந்தாலும், இன்னமும் கூகுள் கார் பற்றிய பேச்சு இருந்து கொண்டுதானிருக்கிறது.

கூகுள் நிறுவனத்தின் பறக்கும் கார் திட்டம் இப்போது உலகம் முழுவதும் அனைவராலும் விவாதிக்கப்படும் விஷயமாக உருமாறியுள்ளது.

2010-ம் ஆண்டிலேயே பறக்கும் கார் திட்டத்துக்கு வித்திட்ட கூகுள் நிறுவனர்களில் ஒருவரான லாரி பேஜ் இப்போதுதான் தனது திட்டத்தை வெளியுலகிற்கு வெளிச்சம்போட்டு காட்டியுள்ளார். அதனால்தான் கூகுள் பறக்கும் கார் திட்டம் இப்போது விவாதப் பொருளாகி, அனைவரது ஆவலையும் தூண்டும் விஷயமாகியுள்ளது.

ஜீ ஏரோ (Zee Aero) எனும் இந்த நிறுவனத்தில் 2010-ம் ஆண்டிலிருந்தே முதலீடு செய்துள்ளார். இதுவரை அவர் செய்துள்ள முதலீட்டு அளவு 10 கோடி டாலராகும்.

சிலிக்கான் பள்ளத்தாக்கில் செயல்படும் ஜீ ஏரோ ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனமாகும்.

பேட்டரியால் இயங்கும் பறக்கும் காரைத் தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது இந்நிறுவனம்.

கலிபோர்னியாவில் மவுன்டன் வியூ பகுதியில் கூகுள் தலைமையகமான ஆல்பபெட் அலுவலகம் அமைந்துள்ள இடத்திலிருந்து ஒரு மணி நேர பயண தூரத்தில் இந்த அலுவலகம் அமைந்துள்ளது.

பறக்கும் கார் திட்டத்தை வெற்றிகரமாக்க மற்றொரு ஸ்டார்ட்அப் நிறுவனமான கிட்டி ஹாக் (Kitty Hawk) நிறுவனத்திலும் முதலீடு செய்துள்ளார். வித்தியாசமான வடிவமைப்பை பெறும் நோக்கில் இந்நிறுவனத்தின் நிதித் தேவைகளையும் பூர்த்தி செய்துள்ளார் லாரி பேஜ்.
தனது லட்சிய திட்டத்தை நிறைவேற்ற, தனது சொந்த பணத்தை மட்டுமே முதலீடு செய்துள்ளார் பேஜ். ஆல்பபெட் நிறுவனம் இதில் முதலீடு செய்யவில்லை.

காப்புரிமை
பறக்கும் கார் எப்படி இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது. ஆறு ஆண்டுகளாக பறக்கும் கார் திட்டத்தில் முதலீடு செய்ததை லாரி பேஜ் எப்படி ரகசியமாக வைத்திருந்தாரோ அதைப் போல காரின் வடிவமைப்பு, செயல்படும் விதம் ஆகியன ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.

இருப்பினும் ஜீ ஏரோ நிறுவனம் சில வடிவமைப்புகளுக்கு காப்புரிமை கோரி விண்ணப்பித்துள்ளது. 4 வடிவமைப்பில் ஏதாவது ஒன்றாக இந்த கார் இறுதி வடிவம் பெறும் என தெரிகிறது.

பறக்கும் கார் தயாரிக்கும் திட்டம் பல ஆண்டுகளாகவே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் இப்போது கூகுள் நிறுவனர் லாரி பேஜ் இத்திட்டத்தில் முதலீடு செய்திருப்பது மீண்டும் பறக்கும் காரின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

ஏன் இந்தத் திட்டத்தை லாரி பேஜ் தேர்வு செய்தார், இதற்கு குறிப்பிட்ட காரணம் ஏதும் இருப்பதாகத் தெரிய வில்லை. ஆனால் இதன் மீது சிறிய ஈர்ப்பு இருந்ததே காரணம் என்று தெரிகிறது.

இதுவரையில் டெரபியூகியா எனும் நிறுவனம் மட்டும்தான் ஒரு பறக்கும் காரை தயாரித்துள்ளது. ஆனால் அதன் வடிவமைப்பும், தோற்றமும் சரியில்லை என்பதால் அதன் மீதான ஈடுபாடு எவருக்கும் ஏற்படவில்லை.

எப்படி இருக்கும்?
பறக்கும் கார் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு பலரிடையே ஏற்பட்டுள்ளது. இந்த கார் நான்கு பேர் பயணிக்கும் வகையில் இருக்கும். கம்ப்யூட்டர் கட்டுப்பாட்டில் இது செயல்படும். நீங்கள் செல்ல வேண்டிய இடத்தை கம்ப்யூட்டரில் பதிவு செய்துவிட்டால் அது அந்த இடத்துக்குச் சென்று சேர்க்கும்.

இரண்டாக மடக்கும் வகையிலான இறக்கைகள் இதற்கு இருக்கும். இது மின்சாரத்தால் இயங்கும். 300 ஹெச்பி இன்ஜினால் இது செயல்படும் என தெரிகிறது. தரையில் செல்லும்போது இறக்கைகள் மடங்கி கார் போல செயல்படும்.

இது 500 மைல் தூரம் செல்லக்கூடியது. மணிக்கு 200 மைல் வேகத்தில் செல்லும். தரையிறங்கும் சூழலை இதில் பயணிப்பவர் தீர்மானிக்கலாம். தரையிறங்க போதிய வானிலை அல்லது சூழல் இல்லாது போனால் தரையிறங்க வேண்டிய கட்டளையை நீக்கலாம்.

வானில் பறக்கும்போது அங்கு நிலவும் வான் போக்குவரத்துக்கு ஏற்ப இது பாதையை அமைத்துக் கொள்ளும். மோசமான வானிலை, தடை செய்யப்பட்ட வான் பரப்பு ஆகியவற்றில் இது பயணிக்காது. அவசர காலத்தில் உபயோகிக்கும் வகையில் பாராசூட் இதில் இருக்கும்.

இத்தகைய வசதிகள் கொண்டதாக இருக்க வேண்டும் என்று பறக்கும் காருக்கான இலக்கணங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

இந்த தயாரிப்பு முழுமை பெற 8 ஆண்டு முதல் 12 ஆண்டுகள் ஆகலாம். ஏற்கெனவே 6 ஆண்டுகள் ஆனபடியால் அடுத்த இரண்டு ஆண்டுகளில் இது பறக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பறக்கும் கார் முற்றிலும் பேட்டரியால் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. மின்சாரத்தில் செயல்படுவதால் இதன் எடை குறையும். மின்சார மோட்டார்கள் சிறிய அளவில் வடிவமைக்க முடியும். மேலும் இதில் சிக்கல்கள் குறைவு. ஏற்கெனவே ஆளில்லா (ட்ரோன்) விமானங்கள் இதைப்போன்று பேட்டரியால் செயல்படுவது இந்த முயற்சிக்கு மேலும் தெம்பூட்டியுள்ளதாக ஜீ ஏரோ நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஏற்கெனவே 150 மின் பொறியாளர்கள் இந்த பறக்கும் காரை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். திறமையுள்ள பொறியாளர்களுக்கு தங்கள் நிறுவனத்தில் வாய்ப்பு காத்திருப்பதாக ஜீ ஏரோ இணையதளம் தெரிவிக்கிறது. இந்தத் திட்டத்தில் இணைய விரும்பும் பொறியியல் வல்லுநர்கள் இந்நிறுவனத்தில் சேர்ந்து பறக்கும் கார் திட்டத்தில் தங்களது பங்களிப்பை அளிக்கலாம்.

ஒரு காலத்தில் டிரைவர் இல்லாத கார் சாத்தியமா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் இன்று ஏறக்குறைய அனைத்து கார் தயாரிப்பு நிறுவனங்களும் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளன. அதற்கு வித்திட்டது கூகுளின் டிரைவர் இல்லாத கார் திட்டம்தான். அதேபோல பறக்கும் கார் திட்டமும் வெற்றி பெறும் நாள் வெகு தொலைவில் இல்லை.

No comments:

Post a Comment