பொறியியல் கலந்தாய்வுக்கான ஏற்பாடுகள் அண்ணா பல்கலைக்கழகத்தில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. கலந்தாய்வுக்கூடம், வெளியூர் மாணவர்களுக்கு ஓய்வறை, கல்விக்கடன் வழங்கம் வங்கிகளுக்கு அரங்குகள் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகள் என 583 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் பொது கலந்தாய்வு மூலம் ஒற்றைச்சாளர முறையில் (சிங்கில் விண்டோ சிஸ்டம்) நிரப்பப்படுகின்றன. இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கு ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 722 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களின் விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் பணி முடிவடையும் தருவாயில் உள்ளது.
பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு ஜூன் 20-ம் தேதி ஆன்லைனில் ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்படும். அதைத்தொடர்ந்து தரவரிசைப் பட்டியல் (ரேங்க் லிஸ்ட்) 22-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. 24-ம் தேதி விளையாட்டுப் பிரிவினருக்கும், 25-ம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கும் கலந்தாய்வு நடத்தப்பட இருக்கிறது. பொது கலந்தாய்வு 27-ம் தேதி தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கெனவே அறிவித்துள்ளது.
இந்த நிலையில், கலந்தாய்வில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கான கலந்தாய்வுகூடம், வெளியூர் மாணவர்களுக்கு ஓய்வறை, வங்கிக்கடன் வழங்கும் வங்கிகளுக்கான அரங்குகள் அமைக்கும் பணி அண்ணா பல்கலைக்கழகத்தில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தற்காலிக கூடங்கள் கட்டும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
No comments:
Post a Comment