Friday 10 June 2016

பழங்கதை ஆனது உறவுச் சிக்கல்: மோடியின் அமெரிக்க நாடாளுமன்ற உரை 10 அம்சங்கள்



மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திரமோடி நேற்றுமுன்தினம் அந்த நாட்டு அதிபர் பராக் ஒபாமாவை சந்தித்துப் பேசினார்.
இதைத் தொடர்ந்து அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் நேற்றிரவு அவர் உரையாற்றினார். அமெரிக்க நாடாளுமன்றத்தில் மோடி முதல் முறையாக உரையாற்றினார். அங்கு உரையாற்றிய 5-வது இந்தியப் பிரதமர் என்று பெருமையையும் மோடி பெற்றுள்ளார்.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் மோடியின் பேச்சு கவிதையும், அங்கதமும், சொல்லாட்சியும் நிறைந்ததாக இருந்தது. மோடியின் சுவாரஸ்ய உரையின் 10 முக்கிய அம்சங்கள்:

1. இந்தியாவின் ஒவ்வொரு துறையிலும் முன்னெடுத்து வைக்கப்படும் ஒவ்வொரு நகர்விலும் அமெரிக்காவுடனான கூட்டு தவிர்க்க முடியாததாக உள்ளது.

2. இருநாடுகளின் ஒத்துழைப்பு மிக ஆழமானது என்றாலும், சில நேரங்களில் சில விவகாரங்கள் மீதான நமது பார்வை வேறுபடலாம். இருப்பினும் கொள்கை முடிவுகளில் இருக்கும் சுயாட்சியும், வேறுபட்ட பார்வைகளும் நம் உறவை மேலும் வலுப்படுத்துமே தவிர ஒருபோதும் குலைக்காது.

3. இந்திய - அமெரிக்க நட்புறவு வரலாற்றுத் தயக்கங்களைத் தாண்டியும் வலுப்பெற்றுள்ளது. நமது நல்லுறவு பேச்சுவார்த்தைகள் வெளிப்படைத்தன்மை, ஒரே மாதிரியான எண்ணக் குவிதலால் உறுதியாகியுள்ளது.

4. அறிவுசார் காப்புரிமை தொடர்பாக இந்தியா - அமெரிக்கா இடையேயான இறுக்கத்தை தளர்த்தும் வகையில், "அமெரிக்கர்கள் கர்வ் பால் விளையாட்டுக்காக குணிவதைவிட யோகா பயிற்சி மேற்கொள்ளவே அதிகமாக குணிகிறார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. யோகாவை அமெரிக்காவுக்கு அளித்ததற்கு நாங்கள் அறிவுசார் காப்புரிமை ஏதும் கோரவில்லை" என்றார். (மோடியின் நகைச்சுவை உணர்வை அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைதட்டி ஆர்ப்பரித்து வரவேற்றனர்.)

5. இந்திய - அமெரிக்க உறவுச்சிக்கல் பழங்கதையாகிவிட்டது எதிர்காலத்துக்கான அடித்தளம் வலுவாக உள்ளது. அமெரிக்க கவிஞர் வால்ட் விட்மேன் கூறியதுபோல், "இசைக்குழுவினர் கருவிகளை ஸ்ருதி சேர்த்து பன்படுத்தி வைத்துள்ளனர், இசைப்பதற்கான சமிக்ஞையும் வந்துவிட்டது" என்று மேற்கோள் காட்டினார். அந்த வகையில் இந்திய - அமெரிக்க உறவு அத்தியாயத்தில் ஒரு புது சிம்பொனி இசைக்கத் தொடங்கியுள்ளது.

6. உலக ஜனநாயகத்தின் கோயிலாக அமெரிக்கா விளங்குகிறது. அந்த நாடு இதர ஜனநாயக நாடுகளை ஊக்குவித்து வருகிறது. அந்த வகையில் இந்தியாவுக்கும் அமெரிக்கா ஊக்கமும் ஆக்கமும் அளிக்கிறது.

7. இரு நாடுகளும் ஜனநாயகம், சுதந்திரத்தின் மீது நம்பிக்கை வைத்து செயல் படுகின்றன. அதுதான் நம்மை இணைத்துள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்த போது எல்லோரும் சந்தேகத்தோடு பார்த்தார்கள். இன்று இந்தியா ஒரே நாடாக, ஒருமித்து முன்னேறுகிறது, ஒருமித்து கொண்டாடுகிறது.

8. சர்வதேச பயங்கரவாதத்தை ஒழிக்க இந்தியா - அமெரிக்கா இடையேயான பாதுகாப்பு உடன்பாட்டினை மேலும் வலுப்படுத்த வேண்டும். மதத்தையும் பயங்கரவாதத்தையும் பிரித்தெடுக்கும் கொள்கையின் அடிப்படையில் அந்த உறவு பலப்படுத்தப்பட வேண்டும்.

9. எனது தலைமையிலான அரசின் வேத நூல் சட்டம் மட்டுமே. இந்தியாவில் வாழும் 125 கோடி மக்கள் எவ்வித அச்சமுமின்றி சுதந்திரமாக வாழ்கிறார்கள். சுதந்திரமும் சமத்துவமும்தான் எங்களின் பலம்.

10. மகாத்மா காந்தியின் அஹிம்சை தத்துவம் மார்ட்டின் லூதர் கிங்கை ஈர்த்தது. அதுவே அமெரிக்காவில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.

No comments:

Post a Comment