எம்பிபிஎஸ், பிடிஎஸ் போன்ற மருத்துவப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வை (NEET) ஓராண்டுக்கு ஒத்திவைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக அவசரச் சட்டம் கொண்டுவர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லியில், இன்று (வெள்ளிக்கிழமை) காலை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தில் மருத்துவ படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வை ஓராண்டு ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அமைச்சரவையின் இந்த முடிவு குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படும். குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தபின் அவசரச் சட்டம் அமலுக்கு வரும்.
நாடு முழுவதும் மருத்துவ பொது நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து மருத்துவப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு முதல் கட்டமாக மே 1-ம் தேதி நடத்தப்பட்டது. இரண்டாம் கட்டமாக ஜூலை 24-ல் நடைபெறவிருந்தது.
ஆனால், மருத்துவ பொது நுழைவுத் தேர்வு மத்திய பள்ளிக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) பாடத்திட்டத்தின் கீழ் வருவதால் தமிழகம், தெலங்கானா, ஆந்திரா போன்ற மாநில அரசுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவந்தன.
உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. ஆனால், கடந்த மே 9-ம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், மருத்துவ பொது நுழைவுத் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் எனத் தெரிவித்துவிட்டது.
இந்நிலையில் தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநில அரசுகள் தொடர்ந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வந்தன. இதனையடுத்து, இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மருத்துவ படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வை ஓராண்டு ஒத்திவைக்கும் வகையில் அவசர சட்டம் பிறப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் அனைத்து மாநில சுகாதார அமைச்சர்களும் மத்திய சுகாதார அமைச்சர் ஜெ.பி.நட்டாவை சந்தித்து மருத்துவ பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment